கிளிநொச்சியில் ஹெரோயினுடன் சிக்கியவர்களில் ஒருவர் அதிபரின் மகன்… சுதந்திரக்கட்சி உறுப்பினரின் நடவடிக்கையாலேயே ஹெரோயின் நுகர இடம்கிடைத்தது!

கிளிநொச்சியை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்l சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே மாணவர்கள் மத்தியில் பல்வேறு விரும்பத்தகாத பழக்கங்கள் தற்காலத்தில் பரவியிருந்தாலும், நான்கு மாணவர்கள் பாடசாலை வளாகமொன்றிற்குள்ளேயே நுழைந்து ஹெரோயின் போதைப்பொருளை பாவித்தமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது அனைத்து பகுதிகளும் எதிர்கொள்ளும் சவால் என்ற போதும், வலுவான சமூகப்பிணைப்பு மிக்க சமூகமான தமிழ் சமூகத்தின் தற்கால வாழ்க்கை முறை பற்றிய பல்வேறு கேள்விகளையும் இவை எழுப்பியுள்ளன.

வசதி அதிகரிக்க குடும்பங்கள் சமூகத்திலிருந்து தம்மை பிரித்து தனித்தீவுகளாக வாழ்க்கையை நடத்துவது, பிள்ளைகளை சமூக கண்காணிப்பு- பொறுப்புக்கூறல் மனநிலையிலிருந்து இலகுவாக விடுவித்து விடுகிறதா என்பது கவனத்திற்குரியது.

ஏனெனில், கிளிநொச்சியில் ஹெரோயினுடன் கைதான மாணவர்களில் மிக வசதியானவர்களும் உள்ளனர். கிளிநொச்சியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன், பிரபல பாடசாலையொன்றின் உப அதிபரின் மகன் ஆகியோரும் கைதானவர்களிற்குள் உள்ளனர்.

நான்கு மாணவர்களும் உயர்தரத்தில் கணிதம், உயிரியல் கற்கிறார்கள். நால்வரும் க.பொ.த சாதாரணதரத்தில் 7ஏ, 8ஏ சித்தி பெற்றவர்கள். கல்விகற்ற, வசதியான குடும்பங்களிலேயே மாணவப்பருவ தடுமாற்றங்கள் அதிகமான இடம்பெறுவது ஏன் என்பதை சம்பந்தப்பட்ட பெற்றோர் ஆராய வேண்டும்.

இது ஒரு எச்சரிக்கை மணி. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கை, நண்பர்கள், செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள் குறித்து மீளாய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும்.

இந்த கைதையடுத்து, நேற்று கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கமல்ராஜன் தலைமையில் ஒரு கலந்துரையாடல் நடந்துள்ளது. இதில் மருத்துவர் ஜெயராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, கலாநிதி யோசுவா, வலயக்கல்வி பணிமனை உயர்நிலை உத்தியோகத்தர்கள், சில பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.

மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும், போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கல்வியலாளர்கள் பெற்றோர்கள் குறிப்பாக அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் குரலெழுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், போதைப்பொருள் விற்பனையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், துரதிர்ஷ்டவசமாக போதைப்பாவனைக்கு உந்தப்படும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் விழிப்படையச் செய்து போதியளவு ஆலோசனை-சிகிச்சையையும் வழங்கி தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான உரிய ஆயத்தங்களை செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, கைதான மாணர்கள் எவரும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் அல்ல. மாணவர் ஒருவரின் வாக்குமூல குழறுபடியால் ஆரம்பத்தில் அப்படி செய்தி வெளியானது. தமிழ்பக்கமும் அதை பிரசுரித்தது. பின்னர் உடனடியாக அந்த தகவல் சரி செய்யப்பட்டது.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பிரிவில் 15இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடம் பாவனையின்றி இருப்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது. 

சுதந்திரக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பாடசாலைக்கு சொந்தமான காணிக்குள் அனுமதியின்றி குடியிருந்ததுமல்லாமல், அதில் வெதுப்பகமும் அமைத்துள்ளார். மாற்றுக்காணி வழங்கியும் அவர் அதை ஏற்காமல் அங்கேயே இருக்கிறார்.

இதனால் புதிதாக கட்டப்பட்ட மலசலகூடத்தை மாணவர்கள் பாவிக்க முடியாமலுள்ளது.

அந்த மலசலகூடப்பகுதிக்குள்ளேயே 4 மாணவர்களும் ஹெரோயின் நுகர முயன்றபோது சிக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here