மீண்டும் பரபரப்பு: கோமாவில் கிம்?; அனைத்துப் பொறுப்புகளும் கிம் யோ ஜாங்கிடம் மாற்றம்!

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தகவலை தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சாங் சங் மின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் வாழ்வு இன்னும் முடிவு பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் (தேசியம் மற்றும் சர்வதேசம் உட்பட) அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011ஆம்ஆண்டு ஜனாதிபதியாக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.

இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கிம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்துப் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை என்று தென்கொரிய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். ஜனாதிபதி கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.

கிம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here