வெள்ளிக்காசும்.. தொலைந்த ஆடும்..

இயேசு கூறிய உவமைகளில், தொலைந்த வெள்ளிக்காசும், தொலைந்த ஆடு உவமையும் மிக முக்கியமானவை. அதுபற்றி இயேசு கூறியதை பார்ப்போம்.

வெள்ளிக்காசும்.. தொலைந்த ஆடும்..
இயேசு
இயேசு கூறிய உவமைகளில், தொலைந்த வெள்ளிக்காசும், தொலைந்த ஆடு உவமையும் மிக முக்கியமானவை. அதுபற்றி இயேசு கூறியதை பார்ப்போம்.

“இல்லத் தலைவி ஒருவரிடம் பத்துத் திராக்மா வெள்ளி நாணயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று காணாமல் போய்விட்டது. அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடினார். அதைக் கண்டுபிடித்ததும், அவர் தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல் போன எனது திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று கூறு வார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகன் பாவிகளை மீட்கவே வந்தார்” என்றார். இதற்கு தொடர்ந்து இயேசு இரண்டாம் உவமையைக் கூறினார்.

“உங்களில் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமல்போனால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை அதைத் தேடி அலையமாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அக்கம் பக்கத்து வீட்டினரையும் அழைத்து, ‘என்னோடு மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஏனெனில் காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இவர்களில் ஒருவர்கூட நெறி தவறிப் போகக் கூடாது என்பதே நம் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

இரண்டு உவமைகளில் வெள்ளி நாணயம், ஆடு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன. ஆட்டைத் தொலைத்த மேய்ப்பன், “எனது 100 ஆடுகளில் ஒன்றுதானே காணாமல்போனது, இன்னும் எனக்கு 99 ஆடுகள் இருக்கின்றனவே, காணாமல்போன ஒன்று இல்லாவிட்டால் எனக்கு எந்தப் பெரிய இழப்பில்லை” என்று கூறவில்லை. அதேபோல் அந்த இல்லத் தலைவி, “என்னிடம்தான் இன்னும் 9 வெள்ளிக்காசுகள் இருக்கின்றனவே காணாமல்போன ஒரேயொரு திராக்மா பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கேட்கவில்லை. மாறாக மேய்ப்பன் தன்னிடம் ஒரேவொரு ஆடு மட்டுமே இருப்பதாக எண்ணி, காணாமல்போன அந்த ஆட்டுக்காகக் கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந் தான்.

இல்லத்தலைவியும் தன்னிடம் வேறு திராக்மாக்களே இல்லை என்பதுபோல் காணாமல்போன அந்த ஒரு காசுக்காக வருத்தப்பட்டு கையில் விளக்கை ஏற்றிக்கொண்டு பொறுப்புடன் அதைத் தேடி எடுத்தாள்.

இந்த இரண்டு உவமைகளுக்குப் பின்னும் இயேசு சொன்ன உறுதியான வார்த்தைகள் “மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து வானுலகில் பெரு மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” ஆகவே, மேய்ப்பனின் அக்கறையும், அந்த இல்லத் தலைவியின் அக்கறையும் கடவுளாகிய பரலோகத் தந்தையின் அக்கறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடவுள், மனிதர்கள் மீதான தன் அக்கறையையும், அன்பையும் தன் மகன் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியதை இந்த இரு உவமைகளும் நமக்குச் சுட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here