தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு நிலைகளில் இருந்து ஒரேயடியாக எம்மை தூக்கியெறியக்கூடாது என, எம்.ஏ.சுமந்தரன் அணி போர்க்கொடி தூக்கியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த 10 வருடங்களாக அனைத்து முடிவுகளையும் இலங்கை தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக எடுத்து வந்தது. தேசியப்பட்டியல் நியமனம், வடக்கு முதலமைச்சர் மற்றும் மாநகர முதல்வர்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் தமிழ் அரசு கட்சியே தனித்து கையாண்டது.
கூட்டமைப்பின் தலைமை, கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா உள்ளிட்ட பொறுப்புக்களை தமிழ் அரசு கட்சியே கைவசம் வைத்துள்ளது. இந்த பொறுப்பில் இருந்த தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் நேர்மையாகவும் நடந்து கொண்டிருக்கவில்லை.
கூட்டமைப்பின் கொறடாவாக நியமிக்கப்பட்டிருந்த சிறிதரன், மற்றையவர்களின் நேரத்தை வெட்டி தானே உரையாற்றுவது, இரா.சம்பந்தன் உரையாற்றும் நாட்களில் ஏனையவர்களையும் உரையாற்ற குறிப்பிட்டு, சம்பந்தனால் நேரத்தை விழுங்க வைப்பது, தானே தனியாக நேரம் ஒதுக்கி விளாசி தள்ளுவது என செயற்பட்டு வந்தார்.
இந்த நிலையில், இந்த வருடம் பங்காளிக்கட்சிகள் தமக்குரிய நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளன. கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனும், கொறடாவாக த.சித்தார்த்தனும் நியமிக்கப்பட, இரா.சம்பந்தன் கொள்கையளவில் இணங்கியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியும் இந்த மாற்றத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும், எம்.ஏ.சுமந்திரன் அணி இதில் குழப்பத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது. மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால், இப்பொழுது இலங்கை தமிழ் அரசு கட்சியின் அனேக எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன் அணியிலேயே இணைந்துள்ளனர்.
தேர்தல் சமயத்திலேயே ச.சிறிதரன் அந்த அணியில் இணைந்திருந்தார். தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டதால் அவரும் சுமந்திரன் அணியிலேயே நீடிப்பார். மட்டக்களப்பில் சாணக்கிய ராகுல் வீரபுத்திரனும் சுமந்திரன் அணியிலேயே நீடிக்கிறார்.
சுமந்திரன் அணியில் 4 உறுப்பினர்கள் இருந்த நிலையில், 5வது எம்.பியாக சாள்ஸ் நிர்மலநாதனும் இணைந்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அதி தீவிர தேசியம் பேசிய சாள்ஸ் நிர்மலநாதன், அண்மையில் சுமந்திரன் அணியில் இணைந்து கொண்டுள்ளார். சி.சிறிதரனின் ஏற்பாட்டில் ஓரிரு வாரங்களின் முன்னர் வவுனியாவில் எம்.ஏ.சுமந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பேசப்பட்டவை வெளியில் கசியவில்லை.
எனினும், அந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் சென்று மாவை சேனாதிராசாவுடன், எம்.ஏ.சுமந்திரன் சார்பில் சமரச பேச்சில் ஈடுபட்டார்.
இப்பொழுது பிந்திய நிலவரப்படி, கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா மாற்றத்தை தீவிரமாக எதிர்ப்பதென எம்.ஏ.சுமந்திரன் அணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் தொலைபேசி உரையாடல் வழியாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு நியமனங்களிற்கும் எதிராக கூட்டத்தில் தீவிரமாக பேசுவதற்கு சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலையரசனிடமும் இது குறித்து கலந்துரையாடப்பட்டபோதும், அவர் கூட்டத்தில் கறாராக பேச மறுத்ததாகவும், வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் எம்.ஏ.சுமந்திரன் தரப்பை ஆதரித்து வாக்களிப்பதாகவும் வாக்குறுதியளித்ததாக தகவல்.
தமிழர் அரசு மலர்ந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டாடிய வடமாகாணசபையை கவிழ்த்து கொட்டியதில் முதன்மை பங்கு- க.வி.விக்னேஸ்வரன்- எம்.ஏ.சுமந்திரன் ஈகோ மோதலிற்கே உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாகாணசபையை அல்லோலகல்லோலப்பட வைத்தது சயந்தன், அஸ்மின், ஆனோல்ட் ஆகியோர். எம்.ஏ.சுமந்திரன் அணியாக இயங்கி குழப்பத்தை ஏற்படுத்தினர்.
“அரசியல் கூலிப்படை கலாச்சாரம்“ என அவர்களின் நடத்தையை அப்போது ஊடகங்கள் வர்ணித்தன.
இதே கலாச்சாரம்- கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா பொறுப்புக்களினால் ஏற்படுத்தப்படப் போகிறது போல தெரிகிறது. மாகாணசபைக்குள் இருந்த சுமந்தரன் அணியில் அஸ்மின் இப்பொழுது இல்லை. கனடாவிற்கு ஓடிவிட்டார்.
அஸ்மினின் இடத்தை பிடிக்கப் போவது சிறிதரனா, சாள்ஸ் நிர்மலநாதனா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.