எனது ஹொட்டலுக்காகவா சிங்கராஜ வனத்திற்குள்ளால் வீதி?: சுற்றுச்சுழல் ஆர்வலருக்கு எதிராக யோஷித சட்ட நடவடிக்கை!

சிங்கராஜ வனத்தை ஊடறுத்து அமைக்கப்பட்ட வீதி, தனக்கு சொந்தமான ஹொட்டலிற்காக அமைக்கப்பட்டது என்ற தகவலை வெளியிட்ட சூழலியல் ஆர்வலர் சஞ்சீவ சமிகரவுக்கு சட்டத்தரணி ஊடாக யோஷித ராஜபக்ச கடிதம் அனுப்பியுள்ளார்.

சிங்கராஜ வனப்பகுதியில் அமைந்துள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான ஹோட்டலுக்காகவே, சிங்கராஜா வனப்பகுதி வழியாக சர்ச்சைக்குரிய வீதி திட்டத்தை இராணுவம் நிர்மாணிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சமிகர குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ராஜபக்ஷ, பிரதான வீதியையும், சிங்கராஜா வனப்பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான ஹொட்டலையும் இணைக்க சர்ச்சைக்குரிய வீதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறப்படுவதை மறுத்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சமிகர மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய யோஷித ராஜபக்ஷ, இது தொடர்பாக சட்டத்தரணி ஊடாக கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை 7 நாட்களிற்குள் மீளப்பெற வேண்டும், அதை செய்ய தவறினால் 500 மில்லியன் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என சட்ட நிறுவனம் மூலம் அறிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் சில குழுக்கள் அவர் குறித்த பிம்பத்தை கெடுக்க முயற்சிப்பதாக யோஷிதா ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கராஜா வனப்பகுதி வழியாக இந்த வீதித் திட்டம் அமைக்கப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

சர்ச்சை வலுத்ததையடுத்து, சர்ச்சைக்குரிய வீதித்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் (சென்ஸ்) யுனெஸ்கோவிடம் புகார் அளித்ததை அடுத்து இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

சிங்கராஜ வனக்காடு மூலம் நெலுவ – லங்ககம பகுதிகளிற்கிடையிலான சர்ச்சைக்குரிய வீதித்திட்டம் பிரதேசவாசிகளின் வேண்டுகோளின் பேரில் தொடங்கப்பட்டது என்று நெடுஞ்சாலை அமைச்சு பின்னர் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here