தமிழ் முற்போக்கு கூட்டணி இருவர் பயணிக்கும் சைக்கிள் அல்ல!

மாகாணசபைத் தேர்தலில் 10 மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி வெற்றி நடைபோடும் என்று கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்று (23) மதியம் அட்டன் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது இருவர் பயணிக்கும் சைக்கிள் வண்டி கிடையாது. அறுவர் பயணிக்கும் ஜீப் வண்டியாகும். இலங்கை பாராளுமன்றத்திலேயே நான்காவது பெரிய கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப்பெற்றுள்ளது.

அதேபோல் நுவரெலியா மாவட்டத்திலும் எமது கூட்டணிக்கே வெற்றி கிடைத்துள்ளது. மூவர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர். வெற்றிபெற்றுவிட்டோம் என கூறியவர்களுக்கு இரண்டு எம்.பிக்களே இருக்கின்றனர். எனவே, ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அதுதான்டா வளர்ச்சி என்பதை சின்ன தம்பிக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது சுயேட்சைக்குழுவோ அல்லது மாவட்டக் கட்சியோ கிடையாது. தேசிய கட்சியாகும். சுமார் 10 மாவட்டங்களில் எமது கொடி பறக்கின்றது. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தேசிய இயக்கமாகவும் முற்போக்கு கூட்டணி விளங்குகின்றது.

இது ஆரம்பம் மட்டுமே. அடுத்து மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் 10 இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றிபெறுவோம் என்பது உறுதி. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிரி கட்சி அல்ல. எனவே, அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை ஆதரிப்போம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

நுவரெலியா மாவட்டம் என்பது மலையகத்தின் இதயம். அந்த மாவட்டத்தில் இருந்து மூவர் வெற்றிபெற்றுள்ளனர். அதேபோல் கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் எமக்கு கணிசமானளவு வாக்குகள் கிடைத்துள்ளன. கண்டி, பதுளை, கொழும்பிலும் வெற்றிபெற்றுள்ளோம்.” – என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here