அரசியல்வாதிகளை மக்களே வழிநடத்தும் புதிய யாப்பு: தமிழ் மக்கள் பேரவை!

காலத்தின் தேவை கருதி தமிழ்மக்கள் பேரவையானது தமக்கென ஒருபுதிய யாப்பினை அறிமுகம் செய்யவிருக்கின்றது. இது தேர்தல் அரசியல் கடந்து தமிழ்மக்களின் ஒற்றுமைக்கும் அவர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் வழிசமைக்கும். இந்த முயற்சியிலே பொது அமைப்புக்களினதும், பொதுமக்களினதும் பெரும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ்மக்களை அணிதிரள அழைக்கின்றோம் என தெரிவித்துள்ளது தமிழ் மக்கள் பேரவை.

பேரவை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அத்துடன் இந்தத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் கட்சிக்குள்ளேயும் பல முரண்பாடுகளும் ஜனநாயக விரோதப்போக்குகளும் தலைதூக்கியிருப்பது வேதனையானது.

இதனால் மக்கள் குழப்பமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தரப்பும் மறுதரப்பை விமர்சனம் செய்வதிலும் பார்க்க சுயவிமர்சனம் செய்து தத்தமது நடவடிக்கைகளை நெறிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானதாக அமையும்.

தீய நோக்கங்களுக்காக தவறான கருத்துக்கள் பதிவிடப்படுவதும் அவற்றின் உண்மைத்தன்மை அறியாது அவை பகிரப்படுவதும் குழப்பநிலைகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். கருத்துக்கள் பதிவிடப்படும்பொழுது பிறரின் மனம்நோகாது சரியான, நாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களுடன் உண்மையை எழுதிக்கொள்வது தமிழரின் மரபுக்கு வலுச்சேர்க்கும். ஒருவரிலே பழி தீர்ப்பதற்காக ஊடகங்களைப் பயன்படுத்துவது அறம் ஆகாது. இவை சமூகங்களுக்கிடையே பிரிவினையை வளர்த்துக்கொள்வதற்கே வழிவகுக்கும்.

சமூக ஒற்றுமை என்பது தேசியத்தின் அடிநாதம். ஒற்றுமையில்லாது வெறுப்புக்கள் நீரூற்றி வளர்க்கப்படின் தேசியம் மடிந்து போகும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தோன்றலாம். ஒரு சமூகம் அங்கு நடைபெறும் நல்ல விடயங்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துமாயின், அது வளர்ச்சி பெறுவதுடன் ஒற்றுமையும் மேலோங்கும். எதையும் சந்தேகக் கண்ணுடன் நோக்கி தீய சம்பவங்களை மட்டுமே வடித்தெடுத்து அநாகரிகமாக விமர்சிப்பது பிரிவுகளை ஆழமாக்கும்.

காலத்தின் தேவை கருதி தமிழ்மக்கள் பேரவையானது தமக்கென ஒருபுதிய யாப்பினை அறிமுகம் செய்யவிருக்கின்றது. இது தேர்தல் அரசியல் கடந்து தமிழ்மக்களின் ஒற்றுமைக்கும் அவர்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் வழிசமைக்கும். இந்த முயற்சியிலே பொது அமைப்புக்களினதும், பொதுமக்களினதும் பெரும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ்மக்களை அணிதிரள அழைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here