சுமந்திரன் அடுத்த நகர்வு: கலையரசனின் பதவியை இரண்டரை வருடமாக்க முயற்சி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் ஜனநாயக விரோதமாக, எம்.ஏ.சுமந்திரனினால் அம்பாறையை சேர்ந்த த.கலையரசனிற்கு வழங்கப்பட்ட சர்ச்சை நீடித்து வருகிறது.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு விரைவில் வெடித்து கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை பாதியாக குறைக்க எம்.ஏ.சுமந்திரன் அடுத்த திரைமறைவு நகர்வை ஆரம்பித்துள்ளார். இது குறித்த தகவல்களை இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் கிடைக்கக்கூடாது என்ற அவசரத்தில் அதிகம் யோசிக்காமல், சிவனே என வீட்டில் இருந்த கலையரசனிற்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டு விட்டது.

ஆனால், அதன் பின்னர்தான் கனடா கிளை விழித்துக் கொண்டுள்ளது. கனடா கிளையினாலேயே சுமந்திரன் அணி நிதியளித்து போஷிக்கப்பட்டது. மாவை சேனாதிராசாவை அகற்ற வேண்டும், சாணக்கியன், ப.சத்தியலிங்கம்,ஆனல்ட்டை களமிறக்க வேண்டுமென்பதெல்லாம் கனடா கிளையின் கட்டளைகள். அதற்காகவே இதுநாள் வரை பணத்தை பெருமளவில் இறைத்து வந்தனர். கனடா காசு விவகாரம் அண்மையில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்டக் கிளைகளில் தனக்கு ஆதரவான கிளைகள் மூலம், ப.சத்தியலிங்கத்திற்கு இரண்டரை வருடம் தேசியப்பட்டியல் வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற சுமந்திரன் தீவிர முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

மாவட்டக்கிளையொன்றில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன்மூலம் தேசியப்பட்டியலில் பாதிக்காலத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்கலாமென்பது சுமந்திரன் தரப்பின் எண்ணம்.

இதேவேளை, இன்று (12) இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here