‘ஆபரேஷன் லோட்டஸுக்கு’ அறுவை சிகிச்சை செய்த அசோக் கெலாட்; ராஜஸ்தானில் பாஜகவின் வியூகம் தோல்வி: சிவசேனா விமர்சனம்

ராஜஸ்தானில் அரசியலில் ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்த முயன்ற பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது, அரசியல் நேர்மையற்றதன்மையும், வக்கிரமும் தோற்றுள்ளது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

ராஜஸ்தான் அரசியலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் சச்சின் பைலட் தனி அணியாகச் செயல்பட்டதால், முதல்வர் அசோக் கெலாட் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது.

வரும் 14 ம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் முடிவு செய்திருப்பதால் ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே சச்சின் பைலட்டை, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி சந்தித்துப் பேசியபின் ராஜஸ்தான் அரசியலில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டு அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அசோக் கெலாட் அரசு எதிர்நோக்கி இருந்த ஆபத்துகள் நீங்கியுள்ளன.

இதற்கு பின்புலத்தில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் திட்டம் செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், பாஜக திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் ராஜஸ்தான் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்தது குறித்து தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தானில் ஆபரேஷன் லோட்டஸை செயல்படுத்த முயன்ற பாஜகவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது, அரசியல் நேர்மையின்மை, வக்கிரம் தோற்றுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆபரேஷன் லோட்டஸுக்கு ஆப்ரேஷன் செய்து, பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் கூட அதிகாலை நேரத்தில் செய்யப்பட்ட ஆபரேஷன் லோட்டஸ் முயற்சி தோல்வியில் முடிந்தது. குறைந்தபட்சம் இந்த முறையாவது பாஜக பாடம் கற்க வேண்டும். சில போலியான மருத்துவர்களைக் கொண்டு செப்டம்பரில் மீண்டும் ஆபரேஷன் லோட்டஸ் நடத்த தேதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசம் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்பது போல், பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் எல்லாம் அங்கு வேறு கட்சி நடத்தும் ஆட்சியை சீர்குலைப்பதில்தான் ஆர்வமாக இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வேலையின்மை வளர்ந்து வருகிறது, பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதை சீரமைப்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் மாநிலங்களில் நடத்தும் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆர்வமாக முயன்று வருகிறது.

ஷோலே படத்தில் வரும் கப்பார் சிங் போன்று ஆபரேஷன் லோட்டஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில் ஆபரேஷன் லோட்டஸ் தோல்வி அடைந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கட்சியின் நலனுக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி பணியாற்றுவதாக ஒப்புக்கொண்டார். அசோக் கெலாட் கடந்த ஒரு மாதமாகப் போராடி தனது அரசைக் காப்பாற்றியுள்ளார். மற்ற அரசுகளை பாஜக கவிழ்ந்தது போன்று, தன்னுடைய அரசைக் காப்பாற்றிக்கொள்ள கெலாட் அனைத்து முயற்சிகளையும் செய்தார்.

இதன் மூலம் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் பலவீனமான வீரராக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here