பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், இரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில், சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்று நோய் சிகிச்சைக்காக சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்சய் தத்தின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறுகையில், “சஞ்சய் தத்திற்கு வந்துள்ள புற்று நோய் குணப்படுத்தக் கூடியதுதான். எனினும், கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும். எனவே, அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்தன.

முன்னதாக நேற்று மாலை தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட சஞ்சய் தத், “நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்” என்று தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here