இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: டக்ளஸ், ஜீவன் அமைச்சர்; வியாழேந்திரன், அங்கஜன், மஸ்தானிற்கும் வாய்ப்பு?

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

கண்டி, தலதா மாளிகையில் இன்று காலை இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.

28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்களை கொண்ட அமைச்சு கட்டமைப்பொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருந்தது.

புதிய அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்கவுள்ளார். முன்னர் பொறுப்பு வகித்த கடற்றொழில் அமைச்சையே அவர் இன்றும் பொறுப்பேற்பார் என தெரிய வருகிறது.

தினேஷ் குணவர்தன புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கல்வி அமைச்சராக பதவியேற்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

பவித்ரா வன்னியராச்சி சுகாதார அமைச்சராகவும், அலி சப்ரி நீதி அமைச்சராகவும், மஹிந்தானந்த அலுத்கமகே விவசாய அமைச்சராகவும் பதவியேற்பர் என தெரிகிறது.

நீர்ப்பாசன அமைச்சராக சமல் ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சராக பந்தல குணவர்தன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சராக நாமல் ராஜபக்ஷ ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ஜனக பண்டார தென்னக்கோன் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன தோட்ட அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்லா வெகுஜன ஊடக அமைச்சராகவும் இருப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ஸா கைத்தொழில் அமைச்சராகவும், உதய கம்மன்பிலாவை மின் அல்லது எரிசக்தி அமைச்சராகவும், நெடுஞ்சாலை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும், சுற்றுலா அமைச்சராக பிரசன்னா ரனதுங்காவையும் நியமிக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீ.ல.சு.க.க்கு மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நிமல் சிறிபாலா டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்றும், தயாசிறி ஜெயசேகர மற்றும் ரஞ்சித் சியம்பலபிட்டி ஆகியோர் இரு இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என்றும் அறியப்படுகிறது.

அமைச்சரவை அ்தஸ்துள்ள அமைச்சர்களாக டளஸ் அலகபெரும, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் ​​வீரசேகர, டொக்டர் நலக கோதாவேவ மற்றும் பேராசிரியர் சன்னா ஜெயசுமன மற்றும் டொக்டர் சீதா அரம்பேபொல ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ஜீவன் தொண்டமானிற்கு பிரதியமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு வழங்கப்படலாமென தெரிகிறது. அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அரசாங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here