ஹட்டன் – டிக்கோயா நகரசபை அதிகாரிகளின் அடாவடி: கர்ப்பிணி உத்தியோகத்தருக்கு கருச்சிதைவு?

ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்த நகரசபையின் உயர் பதவிகளில் உள்ள பெண்களால் மிகவும் மோசமாக நடத்தப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நகரசபையின் பிரதம எழுது வினைஞராக இருக்கும் பெண் அதிகாரியும், முகாமைத்துவ உதவியாளரான மற்றொரு பெண் அதிகாரியுமே இவ்வாறு தங்களுக்கு கீழ் பணிப்புரியும் பெண்களிடமும், கர்ப்பிணிப் பெண்களிடமும் கடுமையாக நடந்துக்கொள்வதாக நகரசபையின் ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை முகாமைத்துவ உதவியாளராக இருக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, நகரசபையின் பிரதம எழுதுவினைஞராக இருக்கும் பெண் ஒருவர் கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு அந்த இடத்திலேயே இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனவும், இதனைத் தொடர்ந்து அங்கு பணிப்புரியும் மற்றொரு கர்ப்பிணிப் பெண், அவரின் குடும்பத்தாருக்கு தகவலைத் தெரிவித்துவிட்டு அவரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி செய்துள்ளார்.

சம்பவம் அறிந்து பதறிப்போய் ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு வந்த குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவரும், மாமனாரும், பிரதம எழுதுவினைஞரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அந்தப் பெண்ணின் மாமனார், மருமகளின் கரு கலைந்துவிட்டதாக கூறி ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை இரத்தக்கசிவு ஏற்பட்ட முகாமைத்துவ உதவியாளராகப் பணிப்புரியும் கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி செய்த மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணும் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரும் பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here