சட்டத்திற்கு முரணாக சம்பளம் வெட்டு: வில்லுப்பாட்டு குழுவாகிறதா வடக்கு விவசாய திணைக்களம்?

வடக்கு விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்த பல ஆதாரபூர்வ தகவல்களை தமிழ்பக்கம் ஏற்கனவே வெளியிட்டு வந்துள்ளது. எனினும், வடக்கு விவசாய திணைக்களத்தின் “மரபு“ மாறாமலேயே செயற்பட்டு வருகிறது. வடக்கு விவசாய திணைக்களத்தை முறையாக வழிநடத்த அதிகாரிகளோ, அரசியல் தலைமையோ இல்லையா என்ற சந்தேகத்தையே விவசாய திணைக்களத்தின் அண்மைய நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.

வடக்கு விவசாய திணைக்களத்தில் மிக அண்மையாக நடந்த ஒரு முறையற்ற நடவடிக்கையை தமிழ்பக்கம் வெளிப்படுத்துகிறது.

திருநெல்வேலி விவசாய பண்ணை முகாமையாளராக இருந்தவர் பாஸ்கரன். அந்த சமயத்தில், முறைப்படியான விதிமுறைகளை பேணாமல் முகாமையாளரின் மேசை இலாச்சியை விவசாய திணைக்களத்தின் கணக்காளர் உடைத்து சோதனையிட்டுள்ளார்.

இது முறையற்ற நடவடிக்கை. இலங்கையின் எந்த நிர்வாகத்திலும் இல்லாத நடைமுறை. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், கறாரான செந்தமிழ் அர்ச்சனையை கணக்காளரிற்கு செய்தார், அதனால் அவர் மீது கணக்காளரிற்கு கறல் இருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சாவகச்சேரி விவசாய போதனாசிரியராக உள்ள பாஸ்கரனிற்கு, விவசாய திணைக்களத்தின் கணக்காளர் முருகதாசிடமிருந்து கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அவர் பண்ணை முகாமையாளராக இருந்த சமயத்தில் அரசிற்கு அதிகமான நிதி செலுத்தியுள்ளார், அதற்கான விளக்கத்தையளிக்குமாறும், அதுவரை இம்மாத சம்பளம் இடைநிறுத்தப்படுவதாகவும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஒரு பொறுப்பு வாய்ந்த கணக்காளரிற்கு, அரச நிர்வாக நடைமுறைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். எந்த உத்தியோகத்தரிற்கும் சம்பளத்தை ஹிட்லர் பாணியில் நிறுத்தி வைக்க சட்டம் அனுமதிக்கவில்லை. வேலை செய்த நாளுக்கான சம்பளம், அந்த உத்தியோகத்தரது உரிமை.

அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால், விசாரணை நடத்தப்பட்டு, அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னரே, அந்த நாளுக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட முடியும்.

ஆனால், வடக்கு விவசாய அமைச்சில் முற்றிலும் விசித்திரமான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

தற்போதைய வடக்கு விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவகுமார், அந்த நியமனத்தை பெற்றதும் சற்று விசித்திரமானதுதான். தன்னிலும் சேவை மூப்பில் இருந்த மூன்று அதிகாரிகளை வெட்டி அவர் அந்த இடத்தை பிடித்தார்.

அரசியல் செல்வாக்கின் மூலம், இளநிலை அதிகாரியொருவர் விவசாய திணைக்கள பணிப்பாளர் ஆகிவிட்டார் என்ற அதிருப்தியில் குகதாசன், கோகுலதாசன், செல்வராஜா என்ற இலங்கை விவசாய சேவை உத்தியோகத்தர்கள் மூவரும் மத்திய விவசாய திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுவிட்டனர்.

இதேவேளை, தற்போதைய விவசாய திணைக்களத்தின் முறையற்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த திறமையான அதிகாரிகள் பலரும் மாகாண விவசாய திணைக்களத்தை விட்டு வெளியேறி விட்டனர். மாகாணசபையால் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களே பெரும்பாலும், மாகாண விவசாய திணைக்களத்தில் தற்போது கடமையிலுள்ளனர். மத்திக்கோ, வேறு மாகாணத்திற்கோ இடமாற்றம் பெற வாய்ப்புள்ளவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இடமாற்றம் பெற்று சென்று விட்டனர்.

வடக்கு விவசாய அமைச்சரோ, முதலமைச்சரோ, வேறு பொறுப்பான அதிகாரிகளோ ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை?

இன்றைய வடக்கு விவசாய திணைக்களத்தில் திறமையான அதிகாரிகள் இல்லாததற்கு… அதிகாரிகள் வடக்கிற்கு வெளியில் இடமாற்றம் பெற்று செல்வதற்கு என்ன காரணமென்பதை ஏன் பொறுப்பானவர்கள் கண்டறியவில்லை?

வடக்கு விவசாய திணைக்களத்தின் வினைத்திறனில்லாத செயற்பாட்டை மாகாண நிர்வாகம் ஏன் இன்னும் கேள்வி கேட்கவில்லை?

வடக்கு விவசாய திணைக்களத்தின் இனரீதியான பாகுபாட்டால் சுக்கூர், சகிலா பானு, அனீஸ் போன்ற திறமையான முஸ்லிம் அதிகாரிகள் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். இவர்களில் சகிலா பானு மட்டும் அண்மையில் முதலமைச்சரின் உத்தரவாதத்தையடுத்து திரும்பி வந்துள்ளார்.

பயிர் பாதுகாப்பு தொடர்பான வடக்கு விவசாய திணைக்களத்திலிருந்த ஒரேயொரு நிபுணத்துவம் பெற்ற அதிகாரியான தனபாலசிங்கம், மாகாண விவசாய திணைக்களத்தின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்தே, உரிய காலத்தின் முன் ஓய்வுபெற்றார்.

சில காலத்தின் முன் 25 வரையான பட்டதாரி விவசாய உத்தியோகத்தர்களிற்கு மாகாண திணைக்களத்தில் நியமனம் வழங்கப்பட்டது. அவர்களில் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் மட்டுமே இன்று வடக்கு விவசாய திணைக்களத்தில் பணியாற்றுகிறார்கள்.

இப்படியே தொடர்ந்தால், வடக்கு விவசாய திணைக்களம் என்பது நான்கைந்து அதிகாரிகள் மட்டுமே இருக்கும் வில்லுப்பாட்டு குழுவாகவே முடியுமா என்ற கவலைகள் தோன்ற ஆரம்பித்துள்ளது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here