நினைவிழக்க ஆரம்பித்தாரா சம்பந்தன்?: அதிர்ச்சி தகவல்!

உலகத்திலேயே மிக கேவலமான கட்சி இலங்கை தமிழ் அரசு கட்சிதான் என நெட்டிசன்கள் கலாய்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் இல்லை, சம்பந்தன்-சுமந்திரன் என்ற இரண்டு தனிநபர்களின் தன்னிச்சையான முடிவுதான் அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டி, கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறினார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடக்கம் இறுதியாக க.வி.விக்னேஸ்வரன் வரை இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்தே வெளியேறினர்.

இப்போது, இந்த சர்வாதிகார போக்கிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் பலியாகியுள்ளார்.

இதுவரை சம்பந்தன், சுமந்திரனின் தன்னிச்சையான முடிவை கண்டும் காணாமலும் இருந்து வந்த மாவை சேனாதிராசா, அண்மைய மாதங்களில் சுமந்திரனின் தன்னிச்சையாக நடவடிக்கைகளிற்கு மூக்கணாங்கயிறு இட முயன்றதே, இந்த தேர்தல் தோல்வியும், அவரை அரங்கை விட்டு அகற்ற முயலும் நடவடிக்கையும்.

மாவை சேனாதிராசாவை தோற்கடிப்பதில் எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் தரப்பின் கணிசமான செயற்பாடு இருப்பதாக, மாவை சேனாதிராசா தரப்பு கருதுவதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது, மாவையை கட்சியின் தலைமையிலிருந்து அகற்றி சி.சிறிதரனை பொம்மை தலைவராக நியமிக்க, சுமந்திரன் தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவை சேனாதிராசா எம்.பியாக இல்லாத பட்சத்தில், அவருடன் நிற்கும் அணியை பலவீனப்படுத்தி, தலைமை பதவியை பறிக்கலாமென்பதே திட்டம்.

மாவை சேனாதிராசா தலைமை பதவியில் தொடர்ந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அண்மைக்காலமாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் போக்கை கட்டுப்படுத்துவார், எம்.ஏ.சுமந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கையெடுப்பார் என்று கருதப்படுவதால் மாவை சேனாதிராசாவை அகற்றி, சிறிதரனை கட்சி தலைமையில் உட்கார வைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர். 3 கட்சிகளை கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர். துரைராசசிங்கம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர்.

தேசியப்பட்டியல் என்பது கூட்டமைப்பின் 3 பங்காளிக்கட்சிகளின் வாக்குகளால் பெறப்பட்டது. கூட்டமைப்பின் கூட்டு முடிவுகள், 3 கட்சிகளின் தலைவர்கள், இரா.சம்பந்தனினால் எடுக்கப்பட வேண்டியது. இதுவரை அப்படியான நிலைமையிருக்கவில்லை. இந்த ஒரே காரணம்தான் கூட்டமைப்பிலிருந்து பலர் பிரிந்து சென்றதும், கூட்டமைப்பின் அண்மைக்கால தோல்விகளும். இந்த முடிவெடுக்கும் பொறிமுறையின் பலவீனம்தான், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வகிபாகத்தை இழந்து, இன்று நடுத்தெருவுக்கு வந்துள்ளதும்.

கூட்டமைப்பின் தற்போதைய தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ள நடைமுறை- உலகிலேயே மிகக் கேவலமான கட்டமைப்பை கொண்ட ஒரு கட்சியென்ற அவச்சொல்லை இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஏற்படுத்தியுள்ளது.

தேசியப்பட்டியல் நியமனம் யார் என்பதை இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் இருவரும் தீர்மானித்தனர். அதனை சம்பந்தன் ஏற்றார். அதை நடைமுறைப்படுத்தும்படி செயலாளர் துரைராசசிங்கத்திற்கு உத்தரவிட, அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பொதுவாகவே, துரைராசசிங்கத்தை அறிந்தவர்கள் அவரில் கோபிக்க மாட்டார்கள். வீட்டுக்குள்ளும், வெளியிலும் அவர் பெட்டிப்பாம்பு. எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயற்படுபவர்.

தேசியப்பட்டியல் விவகாரத்தில், நேற்று முன்தினமும், அதற்கு முதல் நாளும் மாவை சேனாதிராசாவுடன் நேரடியாக இரா.சம்பந்தன் பேசினார். எனினும், நேற்று மாவை சேனாதிராசாவுடன் மீண்டும் பேசிய போதும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் பேசிய போதும், மாவை சேனாதிராசாவுடன் அதற்கு முன்னர் பேசவில்லையென தெரிவித்திருந்தார்.

சுயமாக நடமாடும், கேட்கும், பார்க்கும் சக்திகளை கணிசமாக இழந்துள்ள சம்பந்தன் உண்மையில் நினைவிழக்க ஆரம்பித்து விட்டாரா? அல்லது பொய் சொன்னாரா என்ற கேள்வியெழுகிறது.

சம்பந்தன், துரைராசசிங்கத்தை தவிர்த்தால்- தேசியப்பட்டியல் நியமனத்தில் முடிவெடுத்தவர்கள் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறிதரன். அதாவது இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் தேசியப்பட்டியல் நியமனத்தை பற்றி தெரியாது. பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும் இதைப்பற்றி தெரியாது. அப்படியென்றால்- உலகிலேயே மிக கேவலமான- விசித்திரமான கட்சியாகவும், கட்டமைப்பாகவும், இலங்கை தமிழ் அரசு கட்சியையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் நெட்டிசன்கள் வர்ணிப்பதில் என்ன தவறு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here