நுவரெலியாவில் 4 புதிய முகங்கள்!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் புதிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட ஜீவன் குமாரவேல் தொண்டமான் 109,155 விருப்பு வாக்குகளைப் பெற்று முதன்மை நிலையில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் இறந்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு ஜீவன் குமாரவேல் தொண்டமான் நியமிக்கப்பட்டு போட்டியிட்டார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தற்போதைய பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட மருதபாண்டி ராமேஸ்வரன் 57902 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் என்பதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட நிமல் பியதிஸ்ஸ 51,225 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.உதயகுமாரும் முதல் முறையாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 68119 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here