இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படும்: இராதா!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிட மாட்டேன். மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது, கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக களப்பணியாற்றிய அதேபோல் வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். 1991 ஆம் ஆண்டு பிரதேச சபையில் ஆரம்பமான எனது செயற்பாட்டு அரசியல் பயணம் மாகாண அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளேன். சேவல், மயில், வெற்றிலை, தொலைபேசி என பல சின்னங்களின் கீழ் சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டுள்ளேன். ஆனால், அவை அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளேன். மக்களும் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

2010, 2015 ஆம் ஆண்டுகளில் ஆளுங்கட்சில் இருந்து தான் தேர்தலில் போட்டியிட்டோம். இம்முறை எதிரணியில் இருந்து களமிறங்கினோம். கணிசமானளவு வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுதான் எமக்கு கிடைத்த பெறும் வெற்றியாகும். இந்த வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். ஆளுங்கட்சி என்பதாலேயே மொட்டு கட்சிக்கு நுவரெலியாவில் வாக்குகள் விழுந்துள்ளன. நாம் ஐவரை நிறுத்தி இருவர் வெற்றிபெறவில்லை. மூவர் போட்டியிட்டோம், மூவரும் வெற்றிபெற்றோம். இதுதான் நூறுவீத வெற்றியாகும்.

அதிக விருப்பு வாக்குகளை பெற்று செல்வதை விடவும் அதிக ஆசனங்களை பெற்று பாராளுமன்றம் செல்வதே சிறப்பு. அந்தவகையில் எமது அணியில் ஆறு எம்.பிக்கள் இருக்கின்றனர். தேசியப்படடியல் ஒன்றும் அவசியம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். திலகர், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் ஒருவருக்கு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.

பொதுத்தேர்தலில் நாமும், தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்தே செயற்பட்டோம். எனது வெற்றியில் அவர்களின் பங்களிப்பும் இருக்கின்றது. எனவே, எனது நன்றிகளை தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணியை பிளவுபடுத்துவதற்கு சிலர் முயற்சித்தனர். எமக்கு என அழுத்தத்தை கொடுத்ததுடன், மனசாட்சியின்றி செயற்பட்டனர். எம்மை எதிர்த்து போட்டியிட்டவருக்கு 17 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்கும் எமக்கு கிடைத்திருந்தால் ஒரு இலட்சத்தை தாண்டியிருப்போம். எது எப்படியோ ஒப்பந்தக்காரர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இருந்தும் கபடநோக்கம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொண்டோம்.

தேர்தல் காலங்களில் கட்சியை குழப்பினால் எப்படி முன்நோக்கி பயணிக்க முடியும். இதுதான் எனது கடைசி தேர்தல். இனி தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. எனவே, இந்த கட்சியை மறுசீரமைத்து கட்டியழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. நான் உங்களை விட்டுசெல்ல மாட்டேன், ஆனால், நீங்கள் என்னை விட்டுசென்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

எம்முடன் நன்றாக பழகுகின்றனர். மறுநாள் அந்த பக்கம் சென்று முதுகில் குத்துகின்றனர். இப்படி கட்சி நடத்த முடியாது. எனவே, நிச்சயம் மறுசீரமைப்புகளை செய்வோம். சந்திரசேகரனின் பெயர் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். மலையக மக்கள் முன்னணி என்பது மலையக மக்களுக்கான கட்சி. தியாகங்களுக்கு மத்தியில் உருவான கட்சியாகும்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு கூட்டப்படும். எல்லா கட்டமைப்புகளும் கலைக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.” என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here