லெபனானில் உக்கிரமடையும் போராட்டம்!

லெபனானின் பெய்ரூட் துறைமுக வெடிப்பிற்கு அரசின் அலட்சியமே காரணமென குறிப்பிட்டு, அந்த நாட்டில் பொதுமக்கள் போராட்டங்கள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 154 பேர் உயிரிழந்தனர். அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த விபத்திற்கு பொறுப்பேற்று, அரசு பதவிவிலக வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

மத்திய பெய்ரூட்டின் பிரதான சதுக்கத்தில் ஒன்றுகூடிய மக்கள், பாராளுமன்றம் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இதன்போது பொதுமக்களின் பேரணியை தடுக்க, வீதியின் குறுக்கே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதன்பின்னர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஓய்வுபெற்றஇராணுவ அதிகாரியொருவர் தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சின் கட்டடத்தை கைப்பற்றி, தமது புரட்சிக்கான தலைமையகமாக அது அமைந்திருக்குமென அறிவித்ததுடன், அரசாங்கத்தை பதவிவிலக கோரியது.

கிறிஸ்தவ எதிர்க்கட்சியான கட்டேப் கட்சியின் தலைவர் தனது மூன்று அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவ்வாறே செய்து, ‘புதிய லெபனானின் பிறப்புக்கு’ உழைக்க வேண்டும் என்று சாமி ஜெமயல் அழைப்பு விடுத்தார்.

இந்த வெடிப்பில் இறந்தவர்களில் 43 சிரியர்களும் அடங்குவதாக பெய்ரூட்டில் உள்ள சிரிய நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனான் சுமார் ஒரு மில்லியன் சிரிய அகதிகளை கொண்டுள்ளது. லெபனானுக்கான நெதர்லாந்தின் தூதரின் மனைவியான ஹெட்விக் வால்ட்மேன்ஸ்-மோலியரும் செவ்வாய்க்கிழமை குண்டுவெடிப்பில் ஏற்பட்ட காயங்களால் இறந்துவிட்டதாக டச்சு வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here