சாதி அரசியலை நிராகரித்த யாழ் மக்கள்: வாக்கு திருடப்பட்டதாக சுயேச்சைக்குழு ‘குபீர்’!

எமது வாக்கும் திருடப்பட்டுள்ளது என அறிவித்து குபீர் கிளப்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட சாதிக்குழு.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சாதிக்குழுவொன்று களமிறங்கியிருந்தது. சாதிய முரண்பாட்டை ஏற்படுத்தி, அதில் குளிர்காய்ந்து வாக்கு சேகரிக்கலாமென கணக்கிட்டு, சுயேட்சைக்குழு 2 என்ற பெயரில் அந்த குழு களமிறங்கியது.

ஏற்கனவே யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் கலைமதி கிராமத்தில் சுடலை பிரச்சனையை தூண்டி விட்டு, பிரதேசசபை தேர்தலில் ஒரு ஆசனத்தை வென்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பின்னணியில் இந்த சாதி சுயேட்சைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளிற்கு சென்று, சாதிய முரண்பாட்டை தோற்றுவிக்கும் விதமான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தொகையில் ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் தொகையினர் சார்பில் 3 ஆசனங்களை கைப்பற்றுவோம் என்றும் தம்பட்டம் அடித்து வந்தனர்.

இந்த நிலையில், வெறும் 5,492 வாக்குகளையே சாதிக்குழு பெற்றது. இதன்மூலம், ஒடுக்கப்பட்டிருந்த மக்களாலேயே அந்த குழு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சமூக ஒடுக்குமுறை வேறு வடிவத்தை அடைந்துள்ளது, தீண்டாமை ஒழிப்பு காலத்தில் கடைப்பிடித்த அதே எதிர்ப்பு வடிவங்களின் மூலம் அதை எதிர்கொள்ள முடியாது என பலரும் விஞ்ஞானபூர்வமாக கருத்து தெரிவித்தபோது, அவர்களை கட்சியை விட்டு நீக்கி வந்தது இந்த கட்சி. இதன் விளைவாக, சர்வதேச ரீதியிலான பார்வையுடைய மாக்சிச அமைப்பாக ஆரம்பித்த கட்சியை, உள்ளூர் வட்டார கட்சியாக மாற்றியிருந்தனர்.

அரசியல் ரீதியாக தொடர்ந்து தோல்வியடைந்து வந்த சாதி அரசியலை முன்னெடுத்து வந்த இந்த தரப்பின் அரசியலை, தற்போதும் மக்கள் நிராகரித்துள்ளனர்.

இதேபோல, இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பிலும் சாதிய வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தார். இது தவறான அணுகுமுறை, கட்சி உறுப்பினர்களை உள்வாங்குவது, அவர்களிற்கு நியமனம் வழங்குவதில் சாதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்படக்கூடாது என பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், வே.தபேந்திரன் சாதிய வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனினும், அவருக்கும் சுமார் 5,000 வரையான வாக்கே அளிக்கப்பட்டது.

சாதியரீதியான அரசியலை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லையென்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here