தேசியப்பட்டியலை விட்டுத்தரக் கோரி மாவையின் வீடு தேடி சென்ற சுமந்திரன், சிறிதரன்: வீட்டு வளாகத்தில் சாரதிகள் மோதல்!

தேசியப்பட்டியல் ஆசனத்தை திருகோணமலையை சேர்ந்த குகதாசனிற்கு விட்டுக்கொடுக்குமாறு மாவை சேனாதிராசாவின் வீடு தேடிச் சென்று வேண்டுகோள் விடுத்தனர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர்.

நேற்று (7) மாலை மாவிட்டபுரத்திலுள்ள மாவை சேனாதிராசாவின் இல்லத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சென்று பேச்சு நடத்தினர். இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரு ஆசனத்தை, திருகோணமலைக்கு- கனடா இறக்குமதியான குகதாசனிற்கு வழங்குமாறு மாவையிடம் இருவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும், அவர்களிற்கு மாவை பிடி கொடுக்கவில்லை. இரா.சம்பந்தன் தேர்தலில் போட்டியிட மாட்டார் என இருந்தபோது, அவரை பேசி, தேர்தலில் போட்டியிட வைத்தேன், அதன்பின்னர் இப்போது நிலைமைகள் மாற்றமடைந்துள்ளன, அதனால் குகதாசனிற்கு ஆசனம் வழங்க வேண்டுமென்ற பழைய நிலைப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையென்பதை மாவை சுட்டிக்காட்டினார்.

கனடா இறக்குமதியான குகதாசன் திருகோணமலையில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். எனினும், அவருக்கு ஆசனம் வழங்குமாறு சிறிதரன், சுமந்திரன் இருவரும் மாவை சேனாதிராசாவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த குகதாசனிற்கு ஆசனம் வழங்க வேண்டுமென நேற்று மாவை சேனாதிராசாவிடம் பேசிய சிறிதரன், இன்று கிளிநொச்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தேர்தலில் தோல்வியடைந்தவர்களிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவது தொடர்பில் அதிருப்தி தெரிவித்த வேடிக்கை இடம்பெற்றது.

இதேவேளை, மாவை சேனாதிராசாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோது, வீட்டு வளாகத்தில் எம்.ஏ.சுமந்திரனின் வாகன சாரதிக்கும், மாவை சேனாதிராசாவின் வாகன சாரதிக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, களேபரமானது. பின்னர், சிலர் தலையிட்டு, சுமந்திரனின் வாகன சாரதியும், வாகனமும் வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழ் அரசு கட்சிக்குள் மாவை அணி, சுமந்திரன் அணி மோதல் வலுத்து வருவதும், இரு தரப்பும் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் மோதிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here