இரகசிய பேச்சுக்கு போன தமிழரசுக்கட்சி: சிவசக்தி ஆனந்தன் வைத்த அதிர்ச்சி நிபந்தனை!

வவுனியா உள்ளூராட்சிசபைகளில் யார் ஆட்சியமைப்பதென்ற போட்டியும், பேரம் பேசல்களும் தீவிரமடைந்துள்ளன. வடக்கில் எங்குமில்லாத அளவிற்கு இரகசிய பேரங்கள் வவுனியாவில் உச்சமடைந்துள்ளன என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்களையும் தமிழ் பக்கம் திரட்டியுள்ளது.

ஏற்கனவே மாந்தை பிரதேசசபையை ஐ.தே.க வென்றிருந்தது. தனது அரசியல் போட்டியாளரான மஸ்தான் அணியிலிருந்து மூவரை தனது பக்கத்திற்கு இழுத்து ரிசாட் பதியூதீன் மாந்தையை கைப்பற்றியிருந்தார்.

இந்தநிலையில் ரிசாட் பதியூதீன்- மஸ்தான்- மஹிந்த அணி மற்றும் ஈ.பி.டிபி கூட்டணி இணைந்து வவுனியா நகரசபையை கைப்பற்ற கடும் முயற்சி எடுத்து வருகின்றது. தமிழ் தேசியம் பேசும் கட்சிகளிற்குள் இல்லாத ஒற்றுமை இவர்களிற்கு வாய்ப்பாக இருக்க, வவுனியா நகரசபையை ஐ.தே.க அல்லது சு.க கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லையென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் வவுனியா நகரசபையில் தனித்து ஆட்சியமைக்க முடியாது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவிருந்தால் மாத்திரமே ஆட்சியமைக்க முடியும். அவர்கள் நடுநிலை வகித்தால் கூட, தென்னிலங்கை கட்சியொன்று வவுனியா நகரசபையை கைப்பற்றிவிடும்.

இதையடுத்து சிவசக்தி ஆனந்தனுடன் தமிழரசுக்கட்சி, புளொட் ஆகியன இரகசிய பேச்சை ஆரம்பித்திருந்தன. இந்த பேச்சுக்களை முதலில் சிவசக்தி ஆனந்தன் நிராகரித்திருந்தார். எனினும், தமிழரசுக்கட்சி இன்னொரு உத்தியை பாவித்தது.

சிவசக்தி ஆனந்தனின் விடாப்பிடியால் வவுனியா நகரம் தென்னிலங்கை கட்சிகளின் கட்டுப்பாட்டில் போய்விடும் என தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் நகரசபைக்கு தெரிவானவர்களுடன் பேச்சு நடத்தினர். கட்சியின் முடிவை மீறி தமக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோரினர்.

இதையடுத்து, அந்த உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தனிடம் சென்று, வவுனியா நகரசபை தொடர்பில் பேச்சு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச சிவசக்தி ஆனந்தன் சம்மதம் தெரிவித்தார்.

நேற்றுத் தொடக்கம் இந்த பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

வவுனியாவில் ஏதாவதொரு சபையில் ஒரு தவிசாளர், ஒரு உப தவிசாளர் பதவி தமது தரப்பிற்கு தந்தால் மாத்திரமே, வவுனியா நகரசபையில் த.தே.கூ வை ஆதரிக்கலாமென சிவசக்தி ஆனந்தன் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இது தமிழரசுக்கட்சிக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. செட்டிக்குளம் பிரதேசசபை புளொட்டிற்கும், வவுனியா தெற்கு பிரதேசசபை தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இரண்டு வருடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மற்றும் நெடுங்கேணி பிரதேசசபை என்பனதான் தமிழரசுக்கட்சிக்கு உரியவை. இதில் நெடுங்கேணி தவிசாளர் பதவியை இழப்பதை தமிழரசுக்கட்சி விரும்பவில்லை. எனினும், தனது கட்சியின் முக்கியஸ்தரான சேனாதிராசாவை வவுனியா நகரசபை தலைவராக்கியே தீர வேண்டிய நெருக்கடியிலும் உள்ளது.

இதேவேளை, இந்த பேச்சுக்களை சிவசக்தி ஆனந்தன் தரப்பு எச்சரிக்கையாக கையாள்வதாக தெரிகிறது. ஏனெனில், சிவசக்தி ஆனந்தன் இந்த பேச்சுக்களில் நேரடியாக சம்மந்தப்படவில்லை. தனக்கு நெருக்கமான சிலரின் மூலமே பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார்.

வவுனியப நகரசபையை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென விரும்பும் ரிசாட், மஸ்தான் அணி, பெருந்தொகை பணத்தை அள்ளிவீசி பேரம்பேசல்களை நடத்தி வருகிறது. வடக்கு உள்ளூராட்சி களத்தில் அதிக பணபேரம் நடக்கும் இடமாக வவுனியா இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here