இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறல்: பாக். பாபர் ஆஸம், ஷான் மசூத் அபார ஆட்டம்!

மான்செஸ்டர் நகரில் நேற்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, இதில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது.

தொடக்க வீரர் ஷான் மசூத் 46 ரன்களுக்கு நங்கூரம் பாய்ச்ச, 11 அட்டகாசமான பவுண்டரிகளுடன் பாபர் ஆசம் 69 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

அண்டர்சன், பிராட், வோக்ஸ், ஆர்ச்சர் என்று அனைவரும் திணறினர்.

கப்டன் அசார் அலி ரொஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார், இதைத்தான் ஜேசன் ஹோல்டர் செய்யத் தவறினார்.

ஷான் மசூத், அபிட் அலி, தொடக்கத்தில் பிராட், ஆண்டர்சனிடம் லேசாகத்தான் தடுமாறினர் ஆனாலும் இருவரும் சேர்ந்து 36 ரன்களைச் சேர்த்த போது ஜோப்ரா ஆர்ச்சர் வந்தார். அப்போது 16 ரன்களில் இருந்த அபிட் அலிக்கு இரண்டு எகிறு பந்துகளை வீசினார். ஆனால் அபிட் அலி அதனை நன்றாகத் தவிர்த்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர் 2வது ஓவரின் முதல் பந்தை அதற்கு நேர்மாறாக புல் லெந்த்தில் வேகமாக வீச மட்டையைத் தாமதமாக அபிட் அலி இறக்க .. ‘டிம்பர்’… ஆஃப் ஸ்டம்ப் எகிறியது.

கப்டன் அசார் அலி இறங்கினார் 6 பந்துகள் தாக்குப் பிடித்தார். வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி ஒரு ரிவியூவையும் வீணடித்துச் சென்றார்.

43 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் ஷான் மசூத் உடன் பாபர் ஆஸம் இணைந்தார். ஜேம்ஸ் அண்டர்சனை 3 பவுண்டரிகள் விளாசினார் ஆஸம், உண்மையில் ஒரு கிளாஸ் பிளேயர் என்பதை நிரூபித்தார். ஆண்டர்சன் முன் கால் நோ-போல் 3ம் நடுவரால் கொடுக்கப்பட்ட முதல் பந்துவீச்சாளாரானார்.

பிராட் ,ஆண்டர்சன் ஸ்பெல்களுக்குப் பிறகு ஆர்ச்சர், ஸ்பின்னர் பெஸ் வரும்போது ஷான் மசூத், பாபர் ஆஸம் உண்மையில் நல்ல டச்சுக்கு வந்திருந்தனர். 70 பந்துகளில் பாபர் ஆஸம் அரைசதம் எடுத்தார்.

மழை குறுக்கிட்டது, பிறகு ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட போது 43/2லிருந்து இருவரும் 139/2 என்று 96 ரன்களைச் சேர்த்திருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here