காதலித்து ஏமாற்றிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திலேயே மாலை மாற்றப்பட்டது!

காதலித்து ஏமாற்றிய வாலிபரை பிடித்த போலீஸார், இருவருக்கும் போலீஸ் நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் திலகவதி. இவருடைய மகள் தேவி (22). இவரை வியாசர்பாடி கென்னடி நகரைச் சேர்ந்த விகாஸ் (28) என்பவர் சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றிதிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விகாசிடம் தேவி கூறினார். ஆனால் அதற்கு மறுத்த விகாஸ், உனது பெற்றோரிடம் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி வரும்படி கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திலகவதி, தனது மகளை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக விகாஸ் மீது கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விகாசை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தேவியை காதலித்து, திருமணத்துக்கு மறுத்தது உறுதியானது. இதையடுத்து கொடுங்கையூர் போலீஸ் நிலையத்திலேயே விகாஸ்-தேவி இருவருக்கும் மாலை மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here