நாளை தேர்தல்: 7,452 வேட்பாளர்கள் களத்தில்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கவுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் நாடாளுமன்ற தேர்தல் நாளை (5) இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் 225 பிரதிநிதிகளை நேரடியாகவும், தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்ய, 7,452 பேர் கோதாவில் குதித்துள்ளனர். 40 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் இவர்கள் களமிறங்கியுள்ளனர்.

மக்களின் வாக்குகளில் இருந்து நேரடியாக 196 பேரும், போனஸ் ஆசனங்கள் மூலம் 29 பேரும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசில் கட்சிகளின் சார்பில் 3,682 பேர் போட்டியிடுகிறார்கள். சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3,800 பேர் போட்டியிடுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 16,263,885 பேர் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றவர்களை அதிகமாக கொண்ட மாவட்டமாக கம்பஹா மாறியுள்ளது. அங்கு 17,85,964 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் 13,48,787 பேரும் கண்டி மாவட்டத்தில் 11,29,100 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 16,263,874 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 12,985 வாக்களிப்பு மையங்களும், 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை வாக்களிப்பு இடம்பெற்றாலும், நாளை மறுநாள் (6) காலை 8 மணி முதலே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகும். முதலாவது முடிவு மாலை 6 மணியளவில் வெளியாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அன்று நள்ளிரவிற்குள் கட்சிகளின் இறுதி நிலவரம் அறிய கிடைக்கும்.

7ஆம் திகதி வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம் வெளியாகும்.

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவியேற்கும். எதிர்வரும் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here