இது குருஷேத்திரம்; தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான யுத்தம்: சிறிகாந்தா!

இது குருஷேத்திரம். தர்மத்திற்கும், அதர்மத்திற்குமிடையிலான யுத்தம். நாங்கள் விடுதலையை விரும்புவது உண்மையென்றால், எங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது உண்மையென்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை எந்த நிலையிலும், என்ன விலைகொடுத்தாவது முன்னெடுத்து சென்று நாங்கள் வெற்றியீட்ட வேண்டுமென்பதில் எங்களுடைய வைராக்கியம் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையென்றால் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை ஆதரித்து அது மாபெரும் வெற்றியீட்டுவதை நீங்கள் எல்லோரும் உறுதிப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தல் களத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்ப என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய அரசியல் விபச்சார கூட்டமைப்பிற்குமே. அனால் களத்தில் வெறு சிலரும் உள்ளனர். நண்பர் டக்ளஸ் தேவானந்தா சொல்கிறார், எம்மை ஆதரியுங்கள், ஒரே இரவில் பிரச்சனைகளை தீர்ப்பேன் என. உண்மைதான் அவர்கள் இரவில் செயற்பட்ட கட்சிதான். யுத்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி இரவில் எப்படி செயற்பட்டது என்பது பற்றி பொதுமக்களிற்கு நன்கு தெரியும்.

அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில். அவரை ஒரு பத்திரிகை அமுல் பேபி என அழைத்தது. எந்த பேபியென்றாலும் அவர் தப்ப முடியாது.

எஞ்சியது விஜயகலா.இம்முறை அவரது நாடகமோ, நாட்டியமோ எடுபடாது. கடந்த முறைகளில் விகிதாசார முறையினால் அவர் தப்பி பிழைத்தார். இம்முறை அவரால் தப்ப முடியாது.

பிரதான போட்டி தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான யுத்தத்தை பொறுத்த மட்டில், தமிழ் மக்கள் அளிக்கும் தீர்ப்பு தீர்க்கமானதாக இருக்கும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை.

நாங்கள் விடுதலையை விரும்புவது உண்மையென்றால், எங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது உண்மையென்றால், எங்கள் விடுதலைப் போராட்டத்தை எந்த நிலையிலும், என்ன விலைகொடுத்தாவது முன்னெடுத்து சென்று நாங்கள் வெற்றியீட்ட வேண்டுமென்பதில் எங்களுடைய வைராக்கியம் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையென்றால் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை ஆதரித்து அது மாபெரும் வெற்றியீட்டுவதை நீங்கள் எல்லோரும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த தேர்தல் பிரச்சாரத்திலே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தன்னுடைய உடல்நிலையை பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திற்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் தேர்தலில் 20 ஆசனம் கிடைக்குமென புருடா விட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கே அது தெரியும், அது சாத்தியமற்றதென. ஒரு பிச்சைக்காரன் காணும் பகல் கனவைப்போல அதை சொல்லியிருந்தாலும், இந்த முறை உங்கள் கட்சி 10 ஆசனங்களை கூட கைப்பற்றாது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இம்முறை யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங்களை கைப்பற்றி, போனஸ் ஆசனத்தையும் கைப்பற்றும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில், நாங்கள் நம்பிக்கை வைத்த நிலைமையில், எங்களை ஏமாற்றியவர்கள். வாக்குறுதிகளை கைவிட்டவர்கள், ஆளும் ஐ.தே.க அரசின் அடிவருடிகளாக மாறியவர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசிகளாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக காற்றில் பறக்கவிட்டவர்கள், இன்னம் சொல்லப் போனால் இந்த துரோகத்தில் கதாநாயகர்களாக கடமையாற்றிய மூவரில்- திருகோணமலையில் சம்பந்தனும், இங்கு சேனாதிராசாவும், சுமந்திரனும் தோற்கடிக்கப்படுவார்கள், தோற்கடிக்கப்படுவதை மானமுள்ள தமிழ் மக்கள் உறுதிப்படுத்துவார்கள் என திட்டவட்டமாக சொல்கிறேன்.

இது குருஷேத்திர யுத்தம். தர்மத்திற்கும் அதர்த்திற்குமிடையில் நடைபெறும் யுத்தம். இலட்சிய விசுவாசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்குமிடையில் நடைபெறும் யுத்தம். இந்த யுத்தத்தில் வேறு எந்தவிதமான கணிப்பீடுகளும் இருக்க முடியாது.

ஒரேயொரு கேள்விதான் இருக்க முடியும். எங்கள் போராட்டத்திலே தங்களை பலியிட்ட, தங்களை அர்ப்பணித்த, எங்கள் யுவதிகளுக்கும் இளைஞர்களிற்கும் விசுவாசமாக இருக்கப் போகிறோமா?

யுத்த களத்தில் ஈடுபட்டிருக்காத போதும் அடுத்தடுத்து வந்த அரசாங்களினால் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களிற்கு விசுவாசமாக இருக்கப் போகிறோமா?

தமது வீடுகளில் பெற்றோர்களிற்கு தெரியாமல் ஒரு கடதாசியை கிறுக்கி வைத்து விட்டு, ஏதாவதொரு இயக்கத்தில் சேர்ந்து, ஆயுதம் ஏந்தி, அங்கே கட்டளையிடும் அதிகாரிகளாக இருந்த வயதில் கூடியவர்களையெல்லாம் அண்ணா என அழைத்து, புதியதொரு பெயரைச்சூடி, இந்தக்களத்திலே நேரடியாக மோதி, தங்களைத்தாங்களே அழித்துக் கொண்டு, இந்த மண்ணிலே எலும்புக்கூடுகளாகவும், மண்டை ஓடுகளாகவும் தமிழீழத்தின் பல பகுதிகளிலும் சிதறிக்கிடக்கும் எங்கள் யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் விசுவாசமாக இருக்கப் போகிறோமா?

அல்லது எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு கோழைகளாக சலுகைகளிற்கும், அற்ப சொற்ப எலும்புத்துண்டுகளிற்குமாக எமது போராட்டத்தை விட்டுக் கொடுக்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி.

அபிவிருத்தியை பற்றி பேசுகிறார்கள். ஒரு காலத்தில் அபிவிருத்தியை பற்றி பேசியவர்களை கிண்டல் செய்தவர்கள், எதிர்த்து நின்றவர்கள், எங்கள் ஆதரவுடன் தோற்கடித்தவர்கள், இன்று அபிவிருத்தி அரசியல் என, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் வெள்ளை வான்கள் வருமென சொன்னதை மறந்தவர்களாகஈ அமைச்சு பதவியேற்க, எந்த அமைச்சு, எத்தனை அமைச்சு என பேரம்பேச மக்களிடம் ஆணை கோருகிறார்கள் என்றால், தமிழ் மக்களின் மதிப்பிடும் தன்மையை, சுதந்திர வேட்கையை எந்தளவில் மதிப்பிட்டுள்ளார்கள் என்பது தெரியும்.

நான் சொல்லும் ஒரு விடயம் சம்பந்தனின் காற்றுவாக்கில் சம்பந்தனின் காதில் விழ வேண்டுமென விரும்புகிறேன்.இன்றைக்கு தமிழின ஒற்றுமை பேசும் இதே சம்பந்தன்தான்- 2001 இல் நானும், சுரேசும், குமரகுருபரனும், சம்பந்தனும்தான் புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உரவாக்கினோம். அது உருவாக்கப்பட்ட சில வாரங்களிலேயே நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, நான் திருகோணமலையில் களமிறங்கினேன். எங்கள் பட்டியலில் 7 பேர். பிரச்சாரங்கள் சூடு பிடித்திருந்த போது, சம்பந்தனின் நடவடிக்கைகளால் வெறுப்படைந்திருந்த திருகோணமலை மக்கள் எனக்கு ஆதரவு தர முன்வந்திருந்தபோது, அது பேரலையாக எழுந்தபோது சம்பந்தன் மிரண்டார். ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள்.அவரும் அவரது தளபதிகளும் எனக்கெதிராக கையிலெடுத்த ஒரு ஆயுதம்- ஒரு தமிழனை வீழ்த்துவதற்காக- கூட்டமைப்பின் ஒரு வேட்பாளரை வீழ்த்துவதற்காக ஒரு நாகாஷ்திரம் பிரயோகிக்கப்பட்டது. குறுகிய பிரதேசவாதம் பிரயோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தானிற்கு திருகோணமலையில் என்ன வேலையென கேட்கப்பட்டது. அதன் எதிரொலி திருகோணமலையில் நான் தோற்கடிக்கப்பட்டேன்.

ஒரு தமிழனை தோற்கடிக்க, கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய இன்னொரு தமிழனை தோற்கடிக்க குறுகிய பிரதேசவாதத்தை கையிலெடுத்த, அதே சம்பந்தன், இங்கு வந்து ஒற்றுமையை பற்றி கூறுகிறார் என்றால் சாத்தான் வேதம் ஓதுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சம்பந்தனின் அரசியல் வாழ்க்கையின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சம்பந்தனை தோற்கடிக்க நான் திருகோணமலைக்கு போக விரும்பினேன். நண்பர்களும் விரும்பினார்கள். ஆனால் எனக்கு தெரியும், அந்த மனிதர் எனக்கெதிராக மீண்டும் அந்த அஸ்திரத்தை கையிலெடுப்பார். அந்த சந்தர்ப்பத்தை இம்முறை அவருக்கு கொடுக்க விரும்பாமல், திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த, ஐந்து முறை இரத்தம் சிந்திய, ரூபனை நாம் களமிறக்கியுள்ளோம்.

3 மணித்தியாலங்கள் அவருடனும், அவரது மனைவியுடனும் வாதாடி, வற்புறுத்தி களமிக்கியுள்ளோம். நான் நம்புகிறேன், சம்பந்தன் இம்முறை திருகோணமலை மக்களால் தூக்கியெறியப்படுவார்.

வரலாற்றின் திருப்புமுனையில் நின்று, தமிழினத்தின் போராட்டத்தின் ஒரு தீர்க்கமான கட்டத்தில் நின்று, மானமுள்ள தமிழ் மக்களை, உணர்வுள்ள தமிழ் மக்களை, செத்துப்போன, மாண்டு மடிந்து போன இளம் சிட்டுக்களையும், குருத்துக்களையும் இன்னமும் தங்கள் நினைகளில் சுமந்து கொண்டுள்ள, ஞாபகமறதியற்ற, தேசிய உணர்வுகொண்ட தமிழ் மக்களை நாங்கள் அறைகூவி அழைக்கின்றோம்.

ஒன்றில் இப்பொழுது. இல்லையென்றால் இனிமேல் இல்லை.

இவர்களுடைய அரசியல் ஆட்டத்திற்கு முடிவுகட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை தவறாமல் நாம் பயன்படுத்த வேண்டும். இது போராட்டத்தின் முதல் அங்கம்.

சந்தர்ப்பவாதிகளை, சதிகாரர்களை, நடிப்பு சுதேசிகளை, எங்கள் மத்தியிலிருந்து எங்களிற்கு துரோகம் செய்து, மக்களின் முதுகில் குத்தி, இலட்சியத்தை விலைபேசி விற்ற தரோகிகளை அரசியலரங்கிலிருந்து அகற்றுவதே முதலாவது கட்டம் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here