ஷானி அபேசேகர கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணி இதுதான்!

பொய்யான தகவல்களை சர்ப்பித்தல் மற்றும் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் எஸ்எஸ்பி ஷானி அபேசேகரவை கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (31) கைது செய்தது.

முகமது ஷியாம் என்ற நபரின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி.வாஸ் குணவர்த்தனவின் வழக்கு தொடர்பிலேயே ஷானி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கொழும்பு குற்றப்பிரிவு, இந்த விஷயத்தை கம்பஹா நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து, சிஐடியின் முன்னாள் இயக்குநரை கைது செய்வது தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியது.

அதன்படி, நேற்று காலை 8.00 மணியளவில் எல்விடிகலவில் உள்ள ஷானி அபேசேகரவின் வீட்டிற்கு சென்ற சிஐடி அதிகாரிகள் அவரைக் கைது செய்து பின்னர் கொழும்பு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் சென்று அவரது 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

ஷானி அபேசேகர நேற்று மாலை கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தவறான தகவல்களைப் புகாரளித்தல், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சமத்தப்பட்டன.

விளக்கமறியல் உத்தரவையடுத்து ஷானி அபேசேகர சிறப்பு பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முகமது ஷியாம் என்ற முஸ்லீம் இளைஞரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு சிஐடியால் கைது செய்யப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில், வாஸ் குணவர்தனாவின் கீழ் கடமையில் இருந்த ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்த கொலை தொடர்பாக சிஐடியால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, கலகெதிஹென பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றில் தேடுதல் நடத்திய சிஐடியின் அப்போது உதவி பொலிஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ஷானி அபேசேகேர, இன்ஸ்பெக்டர் தி. திஸ்ஸெர, இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா (சுவிற்சர்லாந்திற்கு தப்பியவர்) மற்றும் ஒரு குழு அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

வாஸ் குணவர்தன ஆயுதங்களை பல்வேறு குற்றங்களுக்கு பயன்படுத்தியதாக சிஐடி சட்டமா அதிபருக்கு அறிக்கை அளித்திருந்தது.

வாஸ் குணவர்தனாவின் மனைவி, மகன் மற்றும் மருமகன் உட்பட 8 பேர் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

கலகெதிஹெனவில் உள்ள கோழிப்பண்ணையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ரி56 தாக்குதல் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பல ஆயுதங்கள் இருந்தன.

முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன மற்றும் அவரது குழுவினர் கொலை, ஆயுதங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் சி.ஐ.டி ஷானி அபேசேகர மற்றும் பிற அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புதிய அரசு பதவியேற்றதும், தமது அரசில் முக்கிய பதவிவகித்து நல்லாட்சியில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் தொடர்பாக மீள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஆயுதங்கள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கலகெதிஹென வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கம்பஹா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

அவர்கள் ஷானி அபேசேகர, தி.திஸ்ஸெரா, இன்ஸ்பெக்டர் நிஷாந்தா சில்வா மற்றும் ஒரு குழு அதிகாரிகள் ஒரு வாகனத்தில் அவரது வீட்டிற்கு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வந்து, கோழிப்பண்ணையில் வைத்து, அவற்றை மறைத்து வைத்திருந்ததாக கூறி  புகைப்படம் எடுத்தனர். கோழிப்பண்ணையில் ஆயுதங்களை மறைத்து வைத்ததாகதானும், மனைவியும் மேலும் 8 பேரும் கைது செய்யப்பட்டதாக வீட்டு உரிமையாளர் பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

கொழும்பு குற்றப்பிரிவு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கி பலரிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு சிஐடி அதிகாரி விரைவில் கைது செய்யப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here