யாழில் 2 வேட்பாளர்களிற்கு ஆதரவாக சம்பந்தன் கூட்டம்: 8 வேட்பாளர்கள் அதிருப்தி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (1) யாழில் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியிலும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியிலும் இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, பருத்தித்துறை தேர்தல் தொகுதி என தமிழ் அரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், உண்மையில் மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரை ஆதரித்த பிரச்சாரக் கூட்டங்களிலேயே அவர் கலந்து கொள்கிறார்.

இது கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள்  பேரிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் சுமந்திரனை ஆதரித்து சம்பந்தன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேடையில் எல்லா வேட்பாளர்களும் இருந்தபோதும், சுமந்திரன் தனக்கு தேவையென சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். கடந்த நாடாளுமன்ற பதவிக்காலத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி நாடாளுமன்ற குழு கூட்டத்திலும், பிறிதொரு தமிழ் அரசு கட்சி எம்.பி இதனை சுட்டிக்காட்டி, சம்பந்தனின் பக்கச்சார்பான நடவடிக்கைகளை விமர்சித்திருந்தார்.

“எல்லா வேட்பாளர்களையும் மேடையில் வைத்துக் கொண்டு இந்த நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எமக்கு தேவையென்றீர்கள். நாடாளுமன்றத்தின் கடைசிக்காலத்தில் இருக்கிறோம். கூட்டமைப்பின் மீதான பெரும் விமர்சனம், அரசியலமைப்பு முயற்சி தோல்வியை தவிர வேறு எதை கண்டீர்கள். இனியாவது பக்கச்சார்பில்லாமல்- தலைவரை போல- நடவுங்கள்“ என காரசாரமாக விமர்சித்திருந்தார்.

இதன்போது, வழக்கம் போல மௌனமாக சம்பந்தன் உட்கார்ந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் சுமந்திரனை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கடந்தமுறையை போல சர்ச்சை ஏற்படாமலிருக்க, மாவை சேனாதிராசாவை ஆதரித்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதேவேளை, சம்பந்தனின் முடிவிற்கு கூட்டமைப்பின் ஏனைய யாழ் மாவட்ட வேட்பாளர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலுமொரு கூட்டத்திலும் சம்பந்தன் கலந்து கொள்ளலாமென தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here