ஆறுமுகன் தொண்டமானே கொரோனாவை கட்டுப்படுத்தினார்!

நாம் போராடி பெறவேண்டிய எத்தனையோ உரிமைகள் இருக்கிறது. வீட்டு உரிமை, வேலைவாய்ப்பு, கானி உரிமை, சுகாதாரம் உள்ளிட்ட எத்தனையோ உரிமைகள் இருக்கிறது. ஆனால் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காக மட்டுமே கடந்த நான்கரை வருடகாலமாக போராடி வந்துள்ளோம். அவ்வாறு பல போராட்டங்களின் மத்தியிலும் இது வரைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. சம்பள பிரச்சனை என்பது ஒரு தொழிற்சங்க பிரச்சினை. இதனை சிலர் சுயலாபத்திற்காக அரசியலாக்கிவிட்டார்கள். இன்றைய காலகட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வே.

இவ்வாறு இ .தொ. கா வின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலிய சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .

மேற்படி கூட்டத்தில் வேட்பாளர் மருதுபாண்டி ராமேஸ்வரன், மஸ்கெலிய பிரதேச சபை முதல்வர் ஜி.செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ஜீவன் தொண்டமான்,

மலையகத்தில் இன்று சிறுவர் காப்பகங்களே கூடுதலாக காணப்படுகிறது. அதனை முன்பள்ளிகளாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் சில தோட்டங்களில் வாசிகசாலைகள் காணப்படுகிறது. ஆனால் அவை முறையாக இயங்குவதில்லை. ஒவ்வொரு தோட்டங்களிலும் கட்டாயம் வாசிகசாலைகள் அமைத்து எமது வருங்கால சந்ததியினரை சிறந்த கல்விமான்களாக உயர்த்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.

அன்று என் தந்தையை விமர்சித்தவர்கள் இன்று என்னை விமர்சித்து வருகிறார்கள். நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 2015 ஆண்டு முதல் இதுவரை பத்தாயிரம் வீடுகள் மலையகத்தில் கட்டப்பட்டுள்ளதாக சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்திய அரசின் உதவியுடன் 1900 வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டு அதில் 750 வீடுகளே கையளிக்கப்பட்டுள்ளது இதனை எம்மால் நிருபிக்க முடியும்.

கட்டப்பட்ட சில வீடுகளுக்கு ஜன்னலையும் காணவில்லை. கதவையும் காணவில்லை. இப்படி ஊழல்களை செய்துவிட்டு இறந்து போன ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மின்சாரத்திற்கும் தண்ணீருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் ஆறு மாத காலமே ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்து கொரோனாவிலிருந்து எமது மக்களை காப்பாற்றியுள்ளார் 2015 ஆண்டு கட்டப்பட்ட வீட்டுக்கு எப்படி அவரால் மின்சாரமும் தண்ணீரும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இவர்களின் கையாலாத வேலையை இறந்து போன ஒருவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வது எம்மால் ஏற்றுகொள்ள முடியாது.

இத்தருணத்தில் எமக்கு ஒரு பலமான ஜனாதிபதி கிடைத்திருக்கிறார். அவர் மூலமாக மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்காக உங்களின் ஆதரவை எமக்கு வழங்கும் பட்சத்தில் எமது அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல முடியும் என்றார் .

(சாமிமலை ஞானராஜ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here