அமைச்சு பதவியை ஏற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற முடியாது: தமிழ் அரசு கட்சி செயலாளர்!

தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்ற பொழுதெல்லாம் அந்த அமைச்சுப் பதவிகளைக் கொண்டு தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் என்றே சிங்கள தேசியம் சிந்தித்தது. எமது மிகப் பெரிய அறிஞர்களே இந்த அமைச்சுப் பதவிகளினால் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை வரலாறாக்கியுள்ளார்கள். அந்நிலையில் இவர்களால் அமைச்சுப்பதவியைக் கொண்டு எதனைச் சாதிக்க முடியும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மாவடிவேம்பில் இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரிமையோடு வாழ வேண்டிய எமது இனத்தின் மீது வெறுமனே அபிவிருத்தி என்னும் மாயையைத் திணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களது பார்வையிலே அபிவிருத்தி என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல பொருளாதார உரிமை என்ற அடிப்படையிலேதான் பார்க்கின்றோம். அந்த உரிமையினையும் மேற்கொள்வதற்கு நாங்கள் பின்நிற்கவில்லை. அடிமைகளாக இருந்து கொண்டு அபிவிருத்திக்கு கையேந்த மாட்டோம். உரிமையுடன் எங்கள் பொருளாதார உரிமையினையும் பெற்றுக் கொள்வோம்.

இவர்கள் அபிவிருத்தி செய்ய போகின்றார்களாம், சிங்களத் தேசியத்தின் தன்மை தெரியாது, வரலாறுகளை அறியாது சிறுபிள்ளைத்தனமாகக் கணிப்பிடுகின்றார்கள்.

ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் மிகப் பெரிய சட்டமேதை அவரும் அமைச்சராக இருந்தார். ஆனால் ஜோன் கொத்தலாவல என்ற அப்போதைய பிரதமருடன் ஒத்துப் போகவில்லை என்பதற்காக அவர் வஞ்சிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அதே போன்று கனகரெத்தினம் அவர்களும் அமைச்சராக இருந்து மக்களது அபிலாசைகளை நிறைவேற்ற முடியாது அங்கிருந்து வெளியேறினார்.

பிரித்தானிய ராணிக்கு கணக்குக் கற்றுக் கொடுத்த மிகச் சிறந்த கணித மேதை, சட்டவல்லுனர் சீ.சுந்தரலிங்கம் அவர்கள் இருந்த அன்றைய பாராளுமன்றத்திலே சிம்மாசன உரையிலே தமிழ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. முழுக்க முழுக்க சிங்கள மொழியிலேயே உரை நிகழ்த்தப்பட்டது என்பதற்காகத் தன் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார்.

பி.பொன்னம்பலம் மிகச் சிறந்த இடதுசாரித் தலைவர் அவரும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டுதான் அரசோடு ஒன்றுசேர்ந்தவராக இருந்தார். 1975ம் ஆண்டு நடைபெற்ற காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவிற்கு எதிராக களமிறங்கி தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து சிங்கள தேசியவாதம் தமிழர்களின் நியாயமான உரிமைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரை ஏற்கப்படவில்லை. அதன் காரணமாக அவரும் செந்தமிழர் அமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி எங்களுடன் இணைந்து கொண்டார்.

கே.டபிள்யூ.தேவநாயகம் 1970ம் ஆண்டுகளில் குடியரசு அரசிலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட அந்தக் காலத்திலே அப்போது தான் தமிழன் என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என்பதையும் உணர்ந்து எங்களுடன் சேர்ந்தார். ஆனால் 1977லே ஆசை வயப்பட்டு அமைச்சரானார். அப்போது உருவான மிகவும் அநாகரீகமான சட்டம் என்று சொல்லப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவர்தான் பாராளுமன்றத்திலே கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காக முன்வைத்தார்.

ஆக, தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்ற பொழுதெல்லாம் அந்த அமைச்சுப் பதவிகளைக் கொண்டு தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் என்று சிங்களத் தேசியவாதம் சிந்தித்து எங்களைப் புறக்கணித்த செயற்பாடுகளின் காரணமாக மிகப் பெரிய அறிஞர்களே இந்த அமைச்சுப் பதவிகளினால் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முடியாது என்ற உணர்ந்து வந்த நிலையில் இப்போது நம்மில் பலர் அமைச்சுப் பதவியை ஏற்று அமைச்சர்களாக ஆகப் போகின்றார்களாம். அமைச்சரவையிலே இவர்களுடைய வார்த்தைகள் எடுபடமாட்டாது. இவர்களால் அமைச்சுப் பதவியைக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது.

செல்வநாயகம் என்ற மூத்த அரசியல்வாதி மட்டக்களப்பில் சில அபிவிருத்திகளைச் செய்வதாகச் சொன்னார். தமிழ் மக்களுக்கு அநீதி விளைவிக்கும் முகமாக 1972ம் ஆண்டு அரசியலமைப்பு அவர் இருந்தபோதே கொண்டு வரப்பட்டது. அவரால் அந்த தமிழ் மக்களுக்கான அநீதியைத் தடுக்க முடியாமல் போனது. அவர் அடுத்த தேர்தலிலே மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அமைச்சுப்பதவி எடுத்த போதிலும் கூட அவர்கள் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.

அடுத்து, எங்களது இராஜதுரை அண்ணன் கூட அமைச்சுப் பதவியைப் பெற்றார். சில அபிவிருத்தி செய்வதாகச் சொன்னார். ஆனால் தேசியத்தோடு இல்லாததன் காரணமாக மக்கள் அவரைத் தூக்கியெறிந்து விட்டார்கள். தேசியத்தை மறந்து அமைச்சுப் பதவியை எடுப்பவர்கள் எந்தவகையிலும் தமிழர்களின் தேசியம் தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

இந்த நாட்டிலே வளர்ந்து கொண்டு வருகின்ற சிங்களத் தேசியவாதத்தில் இருந்து எமது தமிழ்த் தேசியவாதம் காப்பாற்றப்பட வேண்டும். அந்தத் தமிழ்த் தேசியவாதத்தைக் காப்பாற்றுகின்ற தலைமை எங்களிடம் தான் இருக்கின்றது. அது வீட்டுச் சின்னத்தை மக்களின் சின்னமாக எடுத்துக் கொண்டு இந்தத் தேர்தல் களத்திலே நிற்கின்றது. என்ற அடிப்படையிலே எதிர்வரும் 05ம் திகதி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யக் கூடிய விதத்திலே எமது வாக்குப் பலத்தினை நீரூபிக்க வேண்டும்.

இந்த மண் எங்களின் சொந்த மண். இந்த அடிப்படையிலே நாங்கள் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருக்கின்றோம். வீர சுதந்திரம் வேண்டிப் போராடிய எங்கள் இளைஞர்களின் கனவுகள் தகர்ந்துவிடவில்லை. அதனைத் தகர்க்க விடமாட்டோம் என்பதை 2010ம் ஆண்டு தொடக்கம் வந்திருக்கின்ற ஒவ்வொரு தேர்தலிலுமே நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அந்த வகையிலே நாங்கள் வருகின்ற 05ம் திகதி நடைபெற்ற இந்தத் தேர்தலிலே ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்தத் தீவு தனியே சிங்களப் பௌத்த தேசியவாதத்திற்குரிய என்ற பிரகடணப்படுத்தப்பட இருக்கின்ற இந்த நேரத்திலே தான் நாங்கள் எல்லாம் ஒன்றாகத் திரண்டிட வேண்டும். நாங்கள் உள்ளத்தால் ஒருவர் என்று இந்த உலகிற்குச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதன் மூலம் கோட்டபாய ராஜபக்ச அவர்களின் கனவை தவிடுபொடியாக்கக் கூடிய அணியை நாங்கள் வடக்கு கிழக்கிலே இருந்து அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here