வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று சாத்தியம் குறைவு; பயமின்றி வாருங்கள்: கூல்!

தங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும்ஆகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்றுஅச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது. உண்மையில் மக்கள் இது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை.

நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எம்மைப் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப் பார்த்திருக்கிறோம்.

தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று ஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே இருக்கும். அதாவது நீங்கள் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது தங்களுடைய அன்றாட கடமைகளை செய்யும்போதோ கொரோனா தோற்று ஏற்படுகின்ற வாய்ப்பை விட வாக்களிப்பு நிலையத்திற்குள் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

அத்தோடு நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்லும் போது மாஸ்க் அணிந்து கைகளை கழுவி ஏனையோர் பாவித்த பேனைகளை பாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம்.

வீதிகளில் நடமாடும் போது ஏற்படும் தொற்றுக்குரிய வாய்ப்பினை விட வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் குறைவானது. எனவே உங்களுக்குரிய வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here