அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதானம் இடைநிறுத்தம்: ஏழைகளிற்கு பகிர்ந்தளிக்க ஆலோசனை!

அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் அன்னதான நிகழ்வுஎசுகாதார வைத்திய அதிகாரியால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அன்னதானத்திற்கு பாவிக்கும் பொருட்களை, பிரதேசத்தில் உள்ள ஏழை, எளிய மக்களிற்கு பகிர்ந்தளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள வழிபாட்டிடங்களில் அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் அமைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து, வடக்கு சுகாதார திணைக்களமும் அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அனலைதீவு ஐயனார் ஆலய திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியிடம், ஆலய திருவிழாவிற்கான அனுமதி பெறப்பட்டபோது, அன்னதானம் வழங்கக்கூடாது என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அதையும் மீறி ஆலய நிர்வாகம் அன்னதானம் வழங்கி வந்தது. கடந்த 4 திருவிழா நாட்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இன்று 5ஆம் திருவிழா நாளிலும் அன்னதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதேச மக்கள் சிலர் இது குறித்து வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில், பொதுச்சுகாதார பரிசோதகர்களையும் உள்ளடக்கிய குழுவினர் இன்று ஆலயத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அன்னதானத்திற்கு தயார் செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதையடுத்து அன்னதான நிகழ்வுகளை இடைநிறுத்த சுகாதார வைத்திய அதிகாரி உத்தரவிட்டார். அத்துடன், அன்னதானத்திற்கு பாவிக்கும் பொருட்களை அந்த பகுதியிலுள்ள ஏழை மக்களிற்கு வழங்கும்படியும், சுகாதார வைத்திய அதிகாரி அறிவுரை வழங்கினார். ஆலய நிர்வாகமும் அதை ஏற்றுக்கொண்டது.

தண்ணீர்ப்பந்தலில் காகித குவளை பாவிக்க அனுமதியளிக்கப்பட்டது.

அண்மைய நாட்களில் இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பெருமளவானவர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருந்மை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here