மன்னாரில் சர்வதேச தொண்டு நிறுவனம் வழங்கிய வீடுகள் உடைந்து விழும் நிலையில்!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அமைதிபுரம் ‘பெரிய பண்டிவிசாரிச்சன் 47 வீட்டுத்திட்டம்’ என்னும் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் நாளுக்கு நாள் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிழக்கு, மேற்கு மற்றும் சின்னப்பண்டிவிரிச்சான் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென அமைதிபுரம் ‘பெரிய பண்டிவிசாரிச்சன் 47 வீட்டுத்திட்டம்’ என்னும் கிராமம் அமைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட வீடுகளிற்குள் மக்கள் குடிபுகுந்து ஒருசில நாட்களிலேயே அந்த வீடுகளின் கதவுகளில் போடப்பட்டிருந்த பூட்டுக்கள் கையோடு வந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சில மாதங்களில் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலைதான் தற்போது கூரை மரங்கள் இத்துப்போய் உள்ளதால் சிறிய மழைக்கெல்லாம் மரங்கள், ஓடுகள் உடைந்து விழுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

துற்போது; பெய்து வரும் சிறு மழைக்கு இரண்டு வீடுகளின் கூரையின் சில பகுதி உடைந்து விழுந்துள்ளதாகவும், தங்கள் வீடுகளில் நோயுற்றவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வசித்து வருகின்ற நிலையில் எப்போது எங்களுக்கு மேல் கூரை இடிந்து விழுகிறதோ தெரியாது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் விடையம் தொடர்பில் மடு பிரதேச செயலகம் – உதவி பிரதேச செயலாளர் வினோஜிதா கணேஸ் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது,

குறித்த அமைதிபுரம் கிராம மக்களின் பிரச்சினைகள் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்று வீடுகளை நேரில் பார்வையிட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு புதிதாக வீடுகள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here