தூய தேர்தல் கலாச்சாரத்தைப் பேண நல்லிணக்ககுழுக்கள் தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலானது வன்முறையற்றதும் அமைதியானதும் சுதந்திரமானதும் – நல்லிணக்கத்தினை உருவாக்கக் கூடியதுமான தேர்தலாக நடைபெற வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச நல்லிணக்ககுழுக்கள் தீர்மானித்துள்ளன.

அதன் அடிப்படையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை கல்முனை வடக்கு, சம்மாந்துறை, நாவிதன்வெளி, அம்பாறை மற்றும் உகண ஆகிய பிரதேசங்களில் உள்ள நல்லிணக்க குழுக்களின் பிரதிநிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று கல்முனை சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தில் நேற்று (29) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ரி.தயாபரன், அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் கலாநிதி எஸ்.எல்.அஸீஸ் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்ததுடன் பல தீர்மானங்கள் எட்டப்பட்டது.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சுதந்திரமானதும், ஜனநாயக பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கக்கூடியதும், நீதியானதுமான தேர்தல் நடைமுறைகள் பேணப்பட வேண்டும் எனவும், அம்முறை மூலம் மட்டுமே மக்களின் விருப்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிர்காலத்தில் உண்மையான பெறுமதி சேர்க்கப்படும் எனவும் பொதுமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நீதியானதும் ஜனநாயக ரீதியானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவைகள் தேர்தல் செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும் அனைத்தையும் மீறியே விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இதற்குமுன் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களைக் கவனத்திற்கொண்டு எமது மாவட்ட, பிரதேச மக்கள், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், புத்தி ஜீவிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதான வன்முறைக் கலாச்சாரத்தை இல்லாதொழித்து நீதியும் நியாயமுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு எல்லோரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here