வரப்போவது போர்க்களம்; சரியாக செயற்படாவிட்டால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: வடிவேல் சுரேஷ்

ஜனநாயக கடமையை சரியாக நாம் கையாளாமல் விட்டால் எம்மை ஆண்டவனாளும் காப்பாற்ற முடியாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரும் போது விகிதாசார தேர்தலையும் இல்லாமல் செய்து விடுவார்கள் என முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினை ஆதரித்து வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

தற்போது அமையவுள்ள ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வு கடந்த எட்டு பாராளுமன்ற அமர்வை போன்று இல்லாமல் வழமைக்கு மாறாக ஒரு போர்க்களமாக அமையப் போகின்றது. நாட்டின் ஜனாதிபதி சத்தியபிரமாணம் செய்து விட்டார். சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியாக வந்துள்ளேன் என்ற செய்தியை தந்துள்ளார். என்னைப் பொறுத்தவரையில் இது எச்சரிக்கை என்று நினைக்கின்றேன்.

ஒரு அமைச்சர் கூறினார் நாங்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் பின்னால் போன காலம் போய் தற்போது எங்கள் பின்னால் தமிழ், முஸ்லிம் மக்கள் வரும் காலம் மலரவுள்ளதாக தெரிவித்தார். மதகுரு ஒருவர் உத்தரவு வழங்குகின்றார். இத்தனை மணித்தியாலத்தினுள் மதரசாக்கள், உலமாசபைகள், காதிநீதிமன்றம் என்பன மூடப்பட வேண்டும் என்று பின்னுக்குள்ளவர்களின் துணையுடன் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவற்றுக்கு எவ்வாறு முகம்கொடுக்க எங்களை தயார்படுத்தப் போகின்றோம் என்பது தான் கேள்வி. சிறுபான்மை மக்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதல் முதலாக செய்வது தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தால் இலகு. ஆனால் இம்முறை அந்த நிலைமை இடம்பெறாது. இம்முறை தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து செயற்படுவோம்.

பெரும்பான்மையானவர்கள் அனுபவமிக்கவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது சிறுபான்மை மக்களுக்கு உள்ள ஆயிரம் பிரச்சனைகள் வரும் போது அனுபவசாலிகள் பாராளுமன்றத்தில் இருந்தால் மாத்திரம் குரல் கொடுக்க முடியும். சலுகை அரசியல் தேர்தல் தினத்தன்று இல்லாமல் போய்விடும். மறுநாள் ஆறாம் திகதி இராணுவம் வந்துவிட்டது. கைது செய்து விட்டார்கள், பள்ளிவாயல் உடைக்க வேண்டும் என்று, சடலத்தை எரிக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். அப்போது குரல் கொடுப்பது யார் சலுகை அரசியலா. சிறுபான்மை மக்களாகிய எமக்கு தேவை உரிமை அரசியல்.

எமது உரிமை அரசியலுக்காக குரல் கொடுத்த றிசாட் பதியூதீன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாமல் தவிர்த்துக் கொண்டிருக்கின்றார். இவரை கைது செய்து விடக்கூடாது என்று எனது சமூகமும் நானும் இறைனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் தேர்தலை மையாக வைத்து றிசாட் பதியூதீன் கைது செய்யக் கூடாது என்பதில் அனைவரும் உங்களை வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். அமீர் அலி பாராளுமன்றம் செல்வது தடுக்கப்பட்டால் றிசாட் பதியூதீன் கைது செய்யப்படுவதை யாரும் தடுக்க முடியாது. ஏனெனில் இவருக்கு குரல் கொடுக்க கூடியவர் இவர்தான். இவருடன் நாங்;களும் செயற்படுவோம்.

எமது மதத்தினுடைய, சிறுபான்மை சமூகத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்கின்றனர். மூத்த, நடுத்தர, இளைய சகோதரர்கள் கூறுகின்றார்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தாருங்கள் என்கின்றனர். இவ்வாறு வந்து விட்டால் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற விவாதம் தேவைப்படாது. சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்களை மூடுங்கள், சடலங்களை எரியுங்கள், மதரசாக்களை மூடுங்கள் என்று மதகுருமார்கள் தெரிவிக்க 151 பேரும் கையொப்பம் இட்டால் இதனை இலகுவாக நிறைவேற்றி விடுவார்கள்.

ஜனநாயக கடமையை சரியாக நாம் கையாளாமல் விட்டால் எம்மை ஆண்டவனாளும் காப்பாற்ற முடியாது. எமது சமூகத்தினை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய தேர்தல், எமது இனம், எமது மதத்திற்குரிய தேர்தல் இதனை விட்டுக் கொடுத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரும் போது விகிதாசார தேர்தலையும் இல்லாமல் செய்து விடுவார்கள். 2025ம் ஆண்டு வாக்களிக்க நீங்கள் இருக்க மாட்டீர்கள் இதுதான் நடக்கும் என்றார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, அதன் எதிர்கால தவிசாளர் எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி ராசிக், மத்திய குழு செயலாளர் ஏ.அக்பர் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here