சொந்த மகளை வல்லுறவிற்குள்ளாக்கிய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

தனது மகளான பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தைக்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்தது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா அலகல்ல பகுதியை சேர்ந்த எதிரியான டீமன் சில்வாகே அன்ரன் சில்வா என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

வழக்கில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமி, தனது சாட்சியத்தில் தனக்கு தந்தையால் இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை விவரித்தார். சிறுமியின் சாட்சியத்தை நிரூபிக்கும் வகையில் அவரது தாயாரின் சாட்சியமும் அமைந்தது.

நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி, சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதை உறுதிப்படுத்தினார். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளும் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் இன்று புதன்கிழமை வழங்கினார்.

எதிரி மீதான இரண்டு குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும்.

அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். வழங்கத் தவறின் 2 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here