பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற வாலிபர் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டனர்.

அதன் பிறகு மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மாணவியிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நாகர்கோவில் புத்தேரியில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இவர் நாகர்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர், மேலும் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார்.

இதில் சிறுமியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவான நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவாகி இருந்த அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை கன்னியாகுமரி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மீது போக்சோ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here