தேர்தலின் பின்னர் என்ன செய்வதென்பதற்கு திட்டமுள்ளது: சிவசக்தி ஆனந்தன்!

தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியுடன் தளராது செயற்படுவோம். தேர்தலின் பின்னர் எவ்வாறு பயணிப்பது என்பது பற்றிய ஆரோக்கியமான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. தற்போதுள்ள கையறுநிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கையாள்வது தொடர்பிலும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியிடத்தில் திட்டங்கள் உள்ளனவென்று அதன் பொதுச்செயலாளரும், வன்னிமாவட்ட தலைமை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கனகராஜன் குளத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் அலுலகத்தினை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய அரசியலும், தமிழர்களின் அபிலாஷைகளும் கையறுநிலையில் தான் தற்போதுள்ளது. அடுத்தகட்டமாக என்னசெய்வதென்ற வெறுமையான நிலைமையொன்றே காணப்படுகின்றது.

தமிழ்த் தரப்பில் காணப்பட்ட துருப்புச் சீட்டுக்கள் அனைத்தையும் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் சரணாகதி அரசியலுக்காக விட்டுக்கொடுத்துவிட்டது. தற்போது தமிழர் தரப்பின் பேரம்பேசல் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களும் மாறியிருக்கும் உலக அரசியல் ஒழுங்கை கவனத்தில் கொள்ளாது தமிழ் மக்கள் விடயத்தில் ஏதேச்சதிகாரமான கருத்துக்களையே தெரிவிக்கின்றார்கள். இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லையென்றே கூறுமளவிற்கு நிலைமைகள் மோசடைந்துள்ளன. பொறுப்புக்கூறலை செய்யமாட்டோமென்று சர்வதேசத்திற்கே சவால் விடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்த விடயங்களை தனியே ஒரு அரசியல் கட்டமைப்பாக நாம் கையாண்டு வென்றுவிடமுடியாது. ஆகவே தான் நாம் அடுத்தகட்ட செல்நெறி தொடர்பில் திட்டங்களைக் கொண்டிருக்கின்றோம்.

முதலாவதாக, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சர்வமததலைவர்களையும் ஓரணியில் திரட்டுவதோடு துறைசார் புத்திஜீவிகளையும் ஒருங்கிணைத்து ஒரு நிபுணத்துவம் நிறைந்த சிவில் அமைப்பொன்றை தோற்றுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இந்த சிவில் அமைப்பானது முழுமையான ஜனநாயகப் போக்கினைக் கொண்டிருப்பதோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குரலெழுப்பவல்ல சக்தியைக் கொண்டதாக அமையவுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சிதறிக்கிடக்கும் கொள்கைரீதியாக உடன்படவல்ல அமைப்புக்களை ஓரணியில் திரட்டி தமிழர் நிலத்திற்கும் புலத்திற்குமான உறவுகளை வலுவடையச் செய்யும் வகையிலான சிந்தனைக்குழாமொன்றை உருவாக்குதலையும் இலக்காக கொண்டிருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி அகத்திலும் புலத்தில் ஒருங்கிணைக்கப்படும் தரப்புக்களை மையப்படுத்தி தமிழர் தாயகத்தின் வாழ்வாதார, நிலையான அபிவிருத்திக்கான நிதிக்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் முயற்சிகளை எடுக்கவுள்ளோம்.

அதேபோன்று இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அரசியல் கட்சியின் நியாயமான நிலைப்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள்,சர்வமத தலைவர்களை ஒருங்கிணைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இவை அனைத்தும் தேர்தல்காலத்தில் உங்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த மேடையில் மட்டும் வழங்கப்படும் வாக்குறுதிகளாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. எம்மைப் பொறுத்தவரையில் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் இனமொன்று தமது சமூகத்தின் அனைத்து தரப்புக்களையும் தன்னுள் ஈர்த்து கட்டமைப்பு மிக்கதாக நிறுவன மயப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here