பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தீர்மானம்

பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது என்று முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலானது தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமிக்க ஒன்றாகும். அந்தவகையில் மலையக மக்களின் அடிமை சின்னமான லயத்து வீட்டுமுறை முற்றாக ஒழிக்கப்பட்டு, அனைவரும் நிலவுரிமை பெற்றவர்களாக வாழவேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தே தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எமது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியானது கடந்த காலங்களில் சில திருப்திகரமான சேவைகளை செய்துள்ளது. அதிலும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், அதிகார சபை உருவாக்கம், தனி வீடு, காணி உரிமை ஆகிய விடயங்களும் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு எதிர்காலத்தில் உரிமைசார் அரசியலையும், அபிவிருத்திசார் அரசியலையும் முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது, மூன்று வெவ்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பிராந்தியங்களில் அரசியல் செய்துவருகின்றது. தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த பிராந்தியக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கிலுள்ள பிராந்தியக்குழுக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது.” என்றார்.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here