முல்லை மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த பத்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை நேற்று கைவிட்டனர். மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுடன் நடந்த கலந்துரையாடலை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்று அமைப்பதென்றும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும் வரையில் சுருக்குவலை மீன்பிடியை தடை விதிப்பது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகளையும் இல்லாமல் செய்வது என்றும் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும்- குறிப்பாக சுருக்கு வலை மீன்பிடி இடம்பெறுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வந்தனர். இதையடுத்து கடந்த இரண்டாம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி இருந்தனர். போராட்டக்காரர்களை கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் சந்திக்கவில்லை. இதையடுத்து திணைக்களம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து திணைக்களத்தின் முன்பாக கொட்டகை அமைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த எட்டாம் திகதி கொழும்பில் மீனவர்களுடன் சந்திப்பு இடம்பெற திட்டமிடப்பட்டது. எனினும், முல்லைத்தீவு மீனவர்கள் கொழும்பில் இடம்பெறும் சந்திப்பில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தார்கள். இதையடுத்து நேற்று 12ம் திகதி அமைச்சர் முல்லைத்தீவிற்கு வருவதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று காலை சந்திப்பு இடம்பெற்றது. இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்று அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை சுருக்குவலை மீன்பிடியை தடை விதிப்பது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி இல்லாமல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து கடந்த 10 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.

இந்த சந்திப்பில் அமைச்சருடன் திணைக்கள உயரதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here