ஆறு வாரத்தில் கொரோனா இரு மடங்காகிவிட்டது: உலக சுகாதார அமைப்பு

கடந்த 6 வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “கடந்த ஆறு வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காகி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.6 கோடி பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6,40,000 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். கொரோனா உலகத்தை மாற்றியுள்ளது. மேலும் உலக நாடுகளை ஒன்றிணைத்து விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது 180 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா தொற்று மற்றும் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஓகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here