சுமந்திரனுக்கு தக்க பதிலடி கொடுக்க வீட்டுச்சின்னத்தை வெற்றியடைய வையுங்கள்: செல்வம் ‘குபீர்’!

சவால் மிக்க தேர்தலை சந்தித்துள்ளோம். இந்த சவாலில் நாங்கள் தோற்று போய் விட்டோம் என்றால் தமிழ் சமூகத்திற்காக சிந்திய இரத்தம் விலையற்று அர்த்தம் இன்றி போய் விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை மதியம் ஆதரவாளர்களுடன் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்களது வாக்கு உரிமையை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கே வழங்க வேண்டும். நாங்கள் படுகின்ற கஸ்டம் தொடரும். தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தான் குரல் கொடுப்பார்கள். வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். எதிர் வரும் 5 ஆம் திகதிக்கு பின் யாரும் வர மாட்டார்கள்.

5 ஆம் திகதிக்கு பின்னர் மக்களுக்கு எதும் பிரச்சினை என்றால் குரல் கொடுப்பது நாங்களே. தமிழ் தேசிய போராட்டத்திற்காக பங்களிப்பு செய்த முன்னாள் போராளிகளை நாங்கள் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.

முன்னாள் கடற்புலிகள் தளபதி அன்புராஜ் உட்பட முக்கிய போராளிகள் எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

சுமந்திரன் போன்றவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வீட்டுச் சின்னம் வெற்றி பெற வேண்டும். எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரை ஆதரித்து முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தலைமன்னாருக்கு சென்று வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம், மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மோகன்றாஜ், முன்னாள் கடற்புலிகள் தளபதி அன்புராஜ் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here