கொரோனா தந்த பாடம் கூட்டமைப்பு!

வேட்டையாடுபவர்கள் வேட்டைக் கடாவைக் கொண்டு எவ்வாறு வேட்டையாடுவார்களோ அவ்வாறே சிங்களத் தேசியவாதம் எம்மவர்களையே தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டு மக்கள் முன்னே களமிறக்கியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு வேட்டைக் கடாவாக வந்திருப்பவர்கள் எவ்வாறு எம்மைக் காப்பாற்றப் போகின்றார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களை எமது பூர்வீக நிலத்தில் சிறுபான்மையாக ஆக்குவதற்கு சிங்களப் பேரினவாதம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இதனைத் தடுப்பதற்காக குரல் கொடுத்தது, போராடியது, பாராளுமன்றத்தில் இது தொடர்பான விடயங்களையெல்லாம் முன்வைத்தது, முன்வைத்துக் கொண்டிருப்பது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.

அதன் பிறகு தரப்படுத்தல் என்ற சட்டத்தின் மூலம் கல்வியில் தடையினை விதித்தார்கள். இதன் காரணமாக எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றமை, கல்வி உரிமை பறிக்கப்பட்டமை காரணமாகவே எமது இளைஞர்கள் போராட்டத்தினை ஆரம்பித்தார்கள். அவர்கள் வெறுமனே வீம்புக்குப் போராடவில்லை. எமது இறைமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அந்தப் போராட்டம்.

எமது ஆயுதப் போராட்டம் ஒரு தனி நாட்டுக்கான சகல விடயங்களையும் கொண்டு செயற்பட்டது. ஆனால் உலக நாடுகள் சிலவற்றின் அங்கீகாரம் கிடைக்கின்றமை மாத்திரமே எஞ்சியிருந்தது. அந்தளவு பெருமிதத்துடன் இருந்த அந்தப் பேரியக்கத்தை 2004ம் ஆண்டு எம்முடைய மண்ணின் மைந்தர்களே இரண்டாகப் பிளந்தார்கள். அதன் பின் எமது மக்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள், வதைக்கப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், சொத்துக்கள் அழிக்கப்பட்டன, தடுப்பு முகாம்களிலே இருந்தார்கள். இவ்வாறு எத்தனையோ விடயங்கள் நடந்தேறின. 2009ம் ஆண்டு மே 18ல் இதயத்தில் இரத்தம் கசியாத எந்தவொரு தமிழனும் இருந்திருக்க மாட்டான். இயக்கத்தைப் பிரித்தவர்கள் வெற்றிக்களிப்பை அடைந்தார்கள்.

2006ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வழக்கின் மூலம் வடக்கு கிழக்கைப் பிரித்தார்கள். இருதரப்பினையும் ஆராயாது ஒருகுடைத் தீர்ப்பின் மூலம் அது இடம்பெற்றது. இன்று கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று சொல்லும் நம்மவர்களும் அதற்குத் துணை நின்றார்கள்.

இணைந்த வடக்கு கிழக்கிலே தமிழர்கள் எத்தனை வீதம், பிரிக்கப்பட்ட கிழக்கில் தமிழர்கள் எத்தனை வீதம்? பிரிக்கப்பட்ட கிழக்கில் தமிழர்களும் ஏனைய இனத்தவர்களும் ஒரு சிறு வித்தியாசத்திலேயே இருக்கின்றோம். இப்போது இவர்கள் சொல்லுகின்றார்கள் முஸ்லீம் மக்களிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகின்றார்களாம். இந்த கிழக்கைப் பிரித்துக் கொடுத்தது யார்? முஸ்லீம் மக்களின் விகிதாசார அதிகரிப்பு தோற்றத்திற்குக் காரணம் யார்?

எமது பேரியகத்தைப் பிரித்து. எமது போராட்டத்தை பலமிலக்கச் செய்துவிட்டு இப்போது சொல்லுகின்றார்கள் இளைஞர்களைக் காப்பாற்றவதற்காகச் செய்தேன் இல்லாவிட்டால் இளைஞர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று. வீரபாண்டியன் கட்டபொம்மன் காலத்திலே இவ்வாறு சொல்லியிருந்தால் காறி உமிழ்ந்திருப்பார்கள்.

விடுதலையைக் காட்டிக் கொடுத்தவர்களை யாரும், எந்த வரலாறும் மக்களைக் காப்பாற்றியவர்கள் என்று எழுதியது கிடையாது. இவர்களது கருத்துக்களை நம்புகின்ற அளவிற்கு தமிழ் மக்கள் இருக்க மாட்டார்கள். இவ்வாறு எமது தமிழ்த தேசியத்தை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியவர்கள் இப்போது சிங்கள தேசியவாதத்தினுடைய பிரதிநிதிகளாக இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார்கள்.

தற்போது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மிகக் குறைந்தளவிலான தமிழர்களே வாக்களித்தோம். அவரது பதவிப் பிரமானத்தின் போதே சிறுபான்மையினரைத் தோற்கடிக்கும் சைகையை அவர் காட்டியிருந்தார். அவ்வாறு சிறுபான்மை மக்களைத் தோற்கடிப்பதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் தான் இங்குள்ள மொட்டு. படகு, சூரியன்.

தொல்பொருள் ஜனாதிபதி செயலணியில் சிங்கள் பௌத்த தேசியத்தை கையிலெடுத்திருக்கும் நபர்களை இணைத்து அதனை ஆரம்பித்திருக்கின்றார். அவர்கள் இப்போதே வடக்கு கிழக்கில் கை வைக்கத் தொடங்கி விட்டார்கள். புத்தசாசனத்தைக் காப்பாற்றவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே எம்மவர்கள் அவர்களுடன் இணைந்து வாக்குக் கேட்கின்றார்கள்.

வேட்டையாடுபவர்கள் ஒரு உத்தியைக் கையாள்வார்கள். வேட்டைக் கடாவைக் கொண்டு எவ்வாறு வேட்டையாடுவார்களோ அவ்வாறு எம்மவர்களைத் தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டு மக்கள் முன்னே நிறுத்தியிருக்கின்றார்கள். எம்மை வேட்டையாடுவதற்கு வேட்டைக் கடாவாக வந்திருப்பவர்கள் எவ்வாறு எம்மைக் காப்பாற்றப் போகின்றார்கள்.

விடுதலை வீரனுக்குப் போடப்படுகின்ற விலங்கிற்கும், கொலைச் சந்தேகநபருக்குப் போடப்படுகின்ற விலங்கிற்கும் வித்தியாசம் உண்டு அதனை மக்கள் விளங்கிக் கொள்வார்கள். விலங்குடன் இருக்கின்றவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல.

எங்களுக்கு அபிவிருத்தியைத் தரப் போகின்றார்களாம். கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்கி என்ன பயன் உண்டு. அபிவிருத்தி என்பதும் எமக்கான உரிமை. அதனை உரிமையுடன் பெற வேண்டும். அதனை நாங்கள் சலுகையாகப் பெற வேண்டிய அவசியம் இல்லை. எங்களது இருப்பைக் காப்பற்றிக் கொண்டு தான் எமது விடயங்களை நகர்த்த வேண்டும்.

எமது உரிமைகள் தொடர்பில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலே எழுத்தப்பட்டால் தான் எமது இனம் உரிமையுடன் வாழும். அதனோடு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளே எமது மக்களுக்காக நிலைத்து நிற்கும். இல்லையெனில் இன்னும் சில காலங்களில் அது மற்றவர்கள் உரித்தாக்கும் அளவிற்குச் செல்லும். அவ்வாறாக எமது உரிமையை அரசியலமைப்பில் எழுதும் முயற்சியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். தமிழர்களின் இருப்பை தமிழர் தேசியத்தை நாங்கள் காப்பாற்றி வருகின்றோம்.

அபிவிருத்தி என்ற மாயையில் தமிழர்கள் என்ற உணர்வு இல்லாமல் போனதால் இலங்கையில் பல பாகங்களில் நாம் எம்மினத்தைத் தொலைத்து விட்டோம். வடக்கு கிழக்கிலே நாங்கள் தமிழன் என்கின்ற உணர்வுடன் வாழ்ந்து போராடிக் கொண்டிப்பதாலேயே எமது அடையாளத்தை, எமது நிலத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கள தேசம் எம்மை விழுங்க இருக்கின்ற சந்தர்ப்பத்திலே எம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியத்தோடு நாங்கள் ஒன்றியை வேண்டும். திசை தடுமாறிய பறவைகளாக எம்மில் பலர் மொட்டு, கறுப்புச் சட்டை என்று திரிகின்றார்கள். சங்கே முழங்கு என்ற கூறியவர் வாழ்வும், வளமும் பெற்று எம் மக்களுக்கு சங்கு ஊதுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே நான்கு தமிழ் உறுப்பினர்கள் வரவேண்டிய கட்டத்திலே காலா காலமாக சகோதர இனத்தவர்களுடன் சேர்ந்து வாக்குகளைப் பிரித்து அவர்கள் பாராளுனமன்றம் செல்ல வழிவகுத்தார்கள். கடந்த தேர்தலில் பிள்ளையானுக்குப் அளித்த வாக்குகளால் ஹிஸ்புல்லாவும், கணேசமூர்த்திக்கு அளித்த வாக்குகளால் அமீர்அலியும் வந்தார்கள். அதே போல் தான் இம்முறையும் அவர்கள் பிரிந்து நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வரக் கூடிய வாக்குளைப் பிரித்து அதுவும் சகோதர இனத்தவர்களுக்கே சாதகமாக வரும் வகையில் செயற்படுகின்றார்கள்.

கொரோணா சொல்லித் தந்த பாடம் வீட்டிலேயே இருங்கள். விடுதான் பாதுகாப்பானது என்று. அதுதான் உண்மையும் கூட. வீடு எமது சின்னம் வீட்டை மனதில் வைத்து எமது வாக்குகள் சிதறாமல், சிந்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அளித்து 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here