சினிமா விமர்சனம்- கூடே

ஒரு வகையில் இது பேய் படம் தான். ஆனால் பயமுறுத்தும் பேய் அல்ல, பாசக்கார அழகான பேய். மராட்டிய மொழியில் வெளிவந்த ஹேப்பி ஜர்னி என்ற படத்தின் கதை கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் மல்லுவுட் சாயம் பூசி நெகிழ்வான ஒரு படமாக தந்திருக்கிறார் அஞ்சலி மேனன். பிருத்விராஜுக்கு அவரது தங்கை நஸ்ரியா மீது ரொம்ப பாசம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நஸ்ரியாவிற்கு சின்ன குழந்தையிலிருந்து மூச்சு திணறல் பிரச்னை உண்டு. நஸ்ரியா மீது எத்தனை பாசம் வைத்திருப்பாரோ அந்த அளவிற்கு கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. உடன் படிக்கும் பார்வதி மீது காதலும் உண்டு.

படிப்பில் மட்டும் ஆர்வம் இல்லை. இதனால் தாய்மாமன் அவரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார். கால்பந்து கனவு கலைகிறது. பார்வதி காதல் பறிபோகிறது, எல்லாவற்றுக்கும் மேலாக தங்கை நஸ்ரியா இறந்து போகிறார். வெளிநாட்டில் இருந்து திரும்பும் பிருத்விராஜுக்கு ஊரையும் பிடிக்கவில்லை, யாரையும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் ஒருநாள் வீட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வேனுக்குள் ஒரு காட்சியை பார்க்கிறார். அதில் நஸ்ரியா சிரித்துக் கொண்டிருக்கிறார்.

இறந்த அவர் பிருத்விராஜ் கண்ணுக்கும் அவர் செல்லமாக வளர்த்த நாய்குட்டிக்கும் மட்டும் தெரிகிறார். தங்கை ஆசைப்பட்டதை அண்ணன் நிறைவேற்றுகிறார். அண்ணன் இழந்தவற்றை ஆவியாக இருந்து நஸ்ரியா மீட்டுத் தருகிறார். அது எப்படி என்பதுதான் கதை. பிருத்விராஜ் வழக்கம்போல பண்பட்ட நடிப்பை தந்திருக்கிறார். துள்ளித்திரியும் பருவ காலம் சோர்ந்து திரியும் சோக காலம் என இரண்டையும் இரு கோணத்தில் பிரதிபலிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்தாலும் நஸ்ரியாவின் குறும்பும், கலகலப்பும் அப்படியே இருக்கிறது.

அடுத்த ரவுண்டை அடித்து ஆடுவார் என்றே தெரிகிறது. பார்வதிக்கு அதிக வாய்ப்பில்லை. பிருத்விராஜின் தந்தையாக நடித்துள்ள இயக்குனர் ரஞ்சித், நஸ்ரியாவின் காதலனாக நடித்திருக்கும் ரோஷன் மேத்யூ, கால்பந்து பயிற்சியாளர் அதுல் குல்கர்னி என அனைவரும் தங்களுக்கான கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். யதார்த்தமான கதையில் இறந்த பெண் மீண்டும் தோன்ற முடியுமா? இது சாத்தியமா என்ற லாஜிக் பற்றி கவலைப்படாமல் பார்த்தால் பாசமலர் அன்பில் உருகலாம். அன்பின் வலிமையை காட்சிகளால் அழகாக சித்தரிக்கிறது கூடே.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here