போராட்டத்தை அழிக்க கோட்டாவால் உருவாக்கப்பட்டதே இரணைமடு குடிநீர் திட்டம்: சிறிதரன் ‘பகீர்’ தகவல்!

யுத்த நெருக்கடியை சமாளித்து எப்படி வன்னிக்குள் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை, யுத்தம் முடிந்தவுடன் கோட்டாபய ஆய்வுசெய்தார். குளங்களும், அதைச்சுற்றிய பயிர்ச்செய்கை நிலங்களுமே விடுதலை போராட்டத்தை காப்பாற்றியது என்ற ஆய்வு முடிவு கிடைத்தது. இதையடுத்தே, இரணைமடு குடிநீர்த்திட்டத்தை கோட்டாபய ராஜபக்ச நடைமுறைப்படுத்தினார் என இதுவரை வெளியாகியிராத புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் யாழ் மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரன்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், மாவை சேனாதிராசாவை ஆதரித்து வதிரியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இந்த இரகசிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியை சேர்ந்த யாரும், யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீரை குடிக்க தர மாட்டோம் என ஒருபோதும் சொன்னதில்லை. இரணைமடு குளத்தின் கீழுள்ள 42,000 ஏக்கரில், 15,000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யவே, இரணைமடு தண்ணீர் போதுமானது. அங்குள்ள விவசாயிகள், கிளிநொச்சி விவசாயத்திற்குள்ள தண்ணீர்ப்பிரச்சனையை தீர்த்து விட்டு, தண்ணீரை கொண்டு செல்லுங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

வன்னியில் 4இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எப்படி யுத்த காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை, யுத்தம் முடிந்ததும் கோட்டாபாய ராஜபக்ச ஆய்வு செய்தார். மண்ணெண்ணெய் இல்லை, பெற்றோல் இல்லை, ஒருவிதமான பொருட்களும் அங்கு வரவில்லை. எப்படி அங்கு மக்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆய்வின் முடிவில், அங்குள்ள குளங்களும், குளங்களை சூழவுள்ள பயிர்ச்செய்கையும் அந்த மக்களையும், போராட்டத்தையும் தொடர்ந்து இருக்க வைத்தது என்பதை அறிந்தார்கள்.

இதை உடைப்பதற்கு என்ன வழி? யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் சிஸ்டத்தை உருவாக்கினால், இங்கு முரண்பாட்டை உருவாக்கலாம். எமது பிரதேசங்களையும் மையப்படுத்தி பேசினால் எடுபடக்கூடிய உணர்வுபூர்வமான விடயம் இது. இதை அரசாங்கம் வடிவாக செய்தது. அதில் வேலை செய்பவர்களிற்கு வாகனம், இலட்சக்கணக்கான சம்பளம். அவர்கள் இதை பெரிய விடயமாக கொண்டு வந்தார்கள்.

அப்போதுதான் யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுயைாளர்கள் எம்மை அழைத்து பேசினார்கள். அவர்கள்தான் எமக்கு இதைப்பற்றிய அறிவை தந்தார்கள் என்றார்.

கோட்டாபய ராஜபக்ச அப்படியொரு ஆய்வை மேற்கொண்டதாகவோ, அதன் முடிவு தொடர்பாகவோ இதுவரை இலங்கையில் எந்த மொழி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரணைமடு குடிநீர் திட்டம் சமாதான உடன்படிக்கை சமயத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு, புலிகளால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here