‘பூமியிலேயே ஆபத்தான மனிதன்’ மீண்டும் அரங்கிற்கு வருகிறார்!

‘பூமியிலேயே ஆபத்தான மனிதர்’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது 54வது வயதில் மீண்டும் களத்துக்கு வருகிறார்.

தனது ரசிகர்களால் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் மைக் டைசன். 1985 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சர்வதேச குத்துச்சண்டை களத்தையே தனது அதிரடியான பஞ்ச்சுகளாலும், குத்துகளாலும் மிரட்டி வைத்திருந்தவர் என்பதை மறுக்க முடியாது.

மைக் டைசன் எந்த அளவுக்குப் புகழின் உச்சிக்குச் சென்றாரோ அதே உயரத்துக்கு அவரைச் சுற்றி சர்ச்சையும் பறந்தன என்பது தனிக்கதை. 1987 முதல் 1990 ஆம் ஆண்டுவரை யாரும் எதிர்கொள்ள முடியாத குத்துச்சண்டை சாம்பியனாக உலகில் வலம் வந்தார்.

உலக குத்துச்சண்டை அமைப்பு (டபிள்யுபிஏ), உலக குத்துச்சண்டை கவுன்சில் (டபிள்யுபிசி), சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (ஐபிஏ) ஆகியவற்றின் சாம்பியன் பட்டம் மூன்றையும் ஒன்றாகக் கைப்பற்றிய முதல் வீரர் மைக் டைசன்.

1986 ஆம் ஆண்டு கனடா வீரர் டெர்வர் பெர்பிக்குடன் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 2 வது சுற்றில் வீழ்த்தி மைக் டைசன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். மிகக்குறைந்த வயதில் அதாவது 20 வயதில் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையும் மைக் டைசனுக்கு உண்டு.

அதன்பின் நடந்த 19 தொழில்முறையான குத்துச்சண்டைப் போட்டிகளில் 12 போட்டிகளில் முதல் சுற்றிலேயே எதிர்த்துக் களமிறங்கும் வீரர்களின் முகத்தை, தாடையைக் கிழித்து தனது வெற்றியைப் பதிவு செய்தவர் மைக் டைசன். தனது சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக 9 முறை தக்கவைத்துக் கொண்டவர் மைக் டைசன்.

ஆனால், 1990களில் டைசனுக்கு குத்துச்சண்டை உலகில் சறுக்கல் ஏற்பட்டது. பஸ்டன் டக்லஸ், டோனோவன் ரூடாக், ஹோலிபீல்ட் ஆகியோருடன் நடந்த மோதலில் டைசன் தோல்வி அடைந்தார். அவர் தக்கவைத்திருந்த சாம்பியன் பட்டமும் பறிபோனது.

அதன்பின் 1992 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய டைசன் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார், பின்னர் பரோலில் வெளியே வந்து, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை மாலிக் அப்துல் அஜிஸ் என மாற்றிக்கொண்டார். அதன்பின் 1996 இல் மீண்டும் குத்துச்சண்டை களத்துக்கு வந்து தான் இழந்த பட்டங்களை மீண்டும் பெற்று உலக சாம்பியனாக வலம்வந்தார்.

பிளாய்ட் பேட்டர்ஸன், முகமது அலி, விதர்ஸ்பூன், இவான்டர் ஹோலிபீல்ட், ஜோர்ஜ் ஃபோர்மேன் ஆகிய வீரர்களுக்குப் பின் இழந்த பட்டங்களை மீண்டும் பெற்று சாம்பியனாக டைசன் பெயர் பெற்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியிலிருந்து மைக் டைசன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை 58 சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ள டைசன் அதில் 50 போட்டிகளில் வென்றுள்ளார், இதில் 44 போட்டிகள் நொக் அவுட்டிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகள் குத்துச்சண்டை உலகிலிருந்து விலகி இருந்த மைக் டைசன் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி முன்னாள் குத்துச்சண்டை வீரர் ரோய் ஜோன்ஸ் ஜூனியுடன் கண்காட்சிப் போட்டியில் மைக் டைசன் மோத உள்ளார். 51 வயதாகும் ரோய் ஜோன்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றவர்.

கலிபோர்னியாவில் உள்ள கார்ஸன் நகரில் உள்ள டிக்னிட்டி ஹெல்த் ஸ்போர்ட் பார்க்கில் இருவருக்கும் இடையிலான போட்டி நடக்கிறது. 8 சுற்றுகள் கொண்டதாக நடக்கும் போட்டி 3 மணிநேரம்வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக மைக் டைசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதுபோன்று வீடியோவையும் வெளியிட்டு, மீண்டும் வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின் குத்துச்சண்டைப் போட்டிக்கு மைக் டைசன் வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here