ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்த மற்றொரு கொரோனா நோயாளி தப்பித்தது உண்மையா?

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கொரோனா நோயாளி தப்பியோடியதாக வெளியான செய்திகள் போலியானவை. ஐடிஎச் வைத்தியசாலை நிர்வாகம் இதை அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் நேற்று இந்த தகவல் பரப்பப்பட்டது. எனினும், அதை வைத்தியசாலை நிர்வாகம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையிலிருந்த தப்பியோடி, கைதான போதைப்பொருள் பழக்கமுடையவரால், கொழும்பில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என்றே வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காரணம், அவர் குணமடைந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் கட்டத்திலேயே தப்பியோடியுள்ளார். இன்று (26) அவர் மீளவும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் குணமடைந்து, அன்ரிபொடிகள் உடலில் உருவாகியிருந்தது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் தனி அறையில் தங்கியிருந்துள்ளார். ஜன்னல் வழியாக வெளியேறி, குழாயின் வழியாக கீழிறங்கிய போது, கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே அவரது இடதுகாலில் எலும்பு முறிவு இருந்தது.

தப்பிச்சென்று, முச்சக்கர வண்டியொன்றை நிறுத்த அவர் பல மணி நேரமாக முயன்றும், எந்த வண்டியும் நிறுத்தாததால் அவர் நீண்டதூரம் செல்ல முடியவில்லை. புறக்கோட்டை பகுதியில் இலேசான நெஞ்சுவலியை அவர் உணர்ந்தபோது, மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்ப விரும்பியிருக்கிறார். எனினும், அருகிலிருந்த வைத்தியசாலை என்ற அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரை முச்சக்கர வண்டி சாரதி அழைத்து வந்துள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து தப்பியவர் திருகோணமலையை சேர்ந்தவர். ஆனால், அவர் சில காலத்தின் முன்னர் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டார். புறக்கோட்டையில் யாசகராக வாழ்ந்த வந்துள்ளார். போதைப்பழக்கத்திற்கும் அடிமையானார்.

கொரோனா ஆரம்பநாட்களில் கொழும்பிலிருந்த யாசகர்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, மையங்களிற்கு அனுப்பப்பட்டபோது, இவர் இரணைமடுவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது போதைப்பழக்கம் கண்டறியப்பட்டு, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு கொரோனா தொற்றிற்குள்ளாகி, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here