ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பித்த கொரோனா நோயாளி வீடொன்றிற்குள் நுழைந்து உடைகளையும், சைக்கிளையும் திருடினார்!

ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்ற கொரோனா நோயாளி, தனது பயணப்பாதை தொடர்பாக வழங்கிய தகவல்கள் போலியானவை என தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (24) அதிகாலை ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார்.

அதிகாலை 2 மணியளவில் தனது படுக்கையில் தலையணையை வைத்து, போர்வையால் மூடி, ஒருவர் படுத்திருப்பதை போல தோற்றத்தை ஏற்படுத்தினார். பின்னர் ஜன்னல் வழியாக இறங்கி, குழாய் வழியாக இறங்கி, மதிலேறி குதித்து தப்பிச்சென்றுள்ளார்.

அவர் முன்னர் வழங்கிய வாக்குமூலத்தில், உருகொடவத்தை வழியாக நடந்து கிராண்ட்பாஸ் சென்றதாக தெரிவித்திருந்தார். எனினும், அவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி அளித்த வாக்குமூலம் வித்தியாசமாக இருந்தது.

இதையடுத்து, பொலிசார், சுகாதாரத்துறையினர், புலனாய்வாளர்கள் அவரது பாதை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையிலிருந்து தப்பித்த அவர், வழியில் வீடொன்றிற்குள் நுழைந்து உடைகளையும், சைக்கிள் திருடியுள்ளார். தனது உடையை மாற்றி விட்டு, சைக்கிளிலேயே கோட்டை வரை சென்றுள்ளார்.

அந்த நபர் உடைகளையும், சைக்கிளையும் திருடிய வீடு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், இந்த நோயாளியின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here