புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் பணியாற்றுவது வெறும் 20 தமிழர்களே!

முல்லைத்தீவில் இல்மனைட் எடுப்பது தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளிற்கும், கனிய மணல் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளிற்குமிடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் க.சிவநேசன், முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், துரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

சுற்றாடல் தாக்க அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திட்டத்தை முன்னகர்த்துவது தொடர்பில் வடமாகாணசபை முடிவெடுக்கும் என மாகாணசபை உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றாடல் தாக்க அறிக்கையை தம்மால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தயாரிப்பார்கள் என கனிய மணல் நிறுவனம் குறிப்பிட்டது. அந்த குழுவில் துறைசார்ந்த சிங்கள மொழி பேசுபவர்களே உள்ளடக்கப்படவுள்ளனர்.

அந்த அறிக்கையை வடமாகாணசபை குழுவிடம் கையளிப்பதென்றும், அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே மாகாணசபை முடிவெடுக்குமென்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்த தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பில் எழுத்துமூல இணக்கப்பாடு செய்வதென்றும் முடிவானது. வடமாகாணத்தில் உள்ள இனவிகிதாசார அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு வழங்குவதென்பதே எழுத்துமூல இணக்கப்பாட்டில் ஏற்படுத்தப்படவுள்ளது.

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் 600 பேர் பணியாற்றும் போதும், அதில் வெறும் 20 பேர் மாத்திரமே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை மாகாணசபை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். புல்மோட்டை நியமனங்கள் அரசியல் நியமனங்கள், இங்கே அப்படி நடக்க விடமாட்டோம் என அதிகாரிகள் பதிலளித்தனர்.

முல்லைத்தீவு தொழிற்சாலையில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி வடக்கு மாகாண திறைசேரிக்கு நேரடியாக வைப்பிலிடுவதென்றும் முடிவானது.

அடுத்த மாதம் சுற்றாடல் தாக்க அறிக்கை தயாரானதும், குழுவிலுள்ள பிரதிநிதிகள் புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையை நேரில் பார்வையிடுவதென்றும் முடிவாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here