ரவிராஜ் அரசியலில் ஈடுபட்டதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை; 3 முறைதான் சாவகச்சேரிக்கே வந்தார்: அருந்தவபாலன்!

மாமனிதர் ரவிராஜ் அரசியலில் நீடிப்பதையே சசிகலா விரும்பியிருக்கவில்லை. அவர் வெறும் 3 தடவைகள் தான் தென்மராட்சிக்கு வந்தார். என்னை தோற்கடிக்க வேண்டுமென கட்சியால் வலிந்து கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் ஒரு அப்பாவி. தமிழ் அரசு கட்சியின் தில்லாலங்கடி வேலைகளை பார்த்து இப்பொழுதுதான் மனங்கலங்கி அறிக்கைகள் விடுகிறார். தென்மராட்சி மக்களிற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்காமல், அவர்களின் வாக்குகளை பெறும் தமிழ் அரசு கட்சியின் உத்திகளில் ஒன்றே சசிகலா களமிறக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன்.

இன்று (25) காலை தமிழ்பக்கத்தில் ஒளிபரப்பான “என்னைப் பார்த்து என் அந்த கேள்வியாய் கேட்டாய்?“ நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாமனிதர் ரவிராஜின் மனைவி என்ற அடிப்படையில் சசிகலா மீது நான் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், அரசியல்ரீதியாக சசிகலா அனுபவம் குறைந்தவர். சாவகச்சேரி தொகுதியில் சசிகலாவை தெரிந்தவர்கள் மிகமிகக்குறைவானவர்கள்.

அதிகம் ஏன், ரவிராஜ் இங்கு அரசியல் செய்தபோதும், ஒருநாள் கூட அவர் இங்கு இருந்தது இல்லை. அதற்கு மேலாக ரவிராஜின் அரசியலை அவர் விரும்பியவரும் இல்லை. அதுதான் யதார்த்தமான உண்மை

அவர் கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்தவர். என்னுடைய கணிப்பின்படி, அவர் 3 தடவைகள்தான் சாவகச்சேரிக்கு வந்திருக்கிறார். முதலாவதாக, ரவிராஜின் பூதவுடலுடன் வந்தார். அப்போது இறுக்கமான இராணுவ அழுத்தத்தின் மத்தியில்- அப்போது எமது பாடசாலையின் பெரும்பகுதி இராணுவ முகாமாக இருந்தது- பெரிய அஞ்சலி நிகழ்வு செய்தோம். அந்த மாமனிதனின் உடலை நானும், எனது ஆசிரியர்களும் சுமந்து சென்று, ரவிராஜின் இல்லத்தில் வைத்து விட்டு வந்தோம்.

பின்னர் ரவிராஜின் சிலை திறப்பிற்கு வந்தார். மூன்றாவதாக, இப்பொழுது தேர்தலிற்காக வலிந்து கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் குறைவு. அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அதைவிட, தமிழ் அரசு கட்சியின் தில்லுமுள்ளு வேலைகள் ஒன்றையும் அறியாதவர். இப்பொழுது நீங்கள் பார்த்தீர்களெனில், அவர் மனம் கலங்கி பல அறிக்கைகளையும், பேட்டிகளையும் வழங்குவதை நீங்கள் பார்க்கலாம்.

தமிழ் அரசு கட்சியினர் தொடர்ந்தும் தென்மராட்சி மக்களின் வாக்குகளை பெற்று, தமது பிரதிநிதித்தவத்தை தக்க வைக்க முயற்சிக்கிறார்களே தவிர, தென்மராட்சி மக்களிற்கு ஒரு மக்கள் பிரதிநிதி அவசியமென்பதை ஒருநாளும் கருத்தில் எடுத்ததில்லை.

அருந்தவபாலனை தோற்கடிக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் நோக்கமே தவிர, 2006ஆம் ஆண்டின் பின்னர் அந்த மக்களிற்கு பிரதிநிதிகள் இல்லை, அதை வழங்க வேண்டுமென்ற நோக்கமில்லை. அப்படி வாக்கை பெறவே சசிகலாவை களமிறக்கிள்ளனர்.

ஆனால், அவர்கள் நினைக்கும் சூழல் இப்பொழுது இல்லை. எனக்கு அவர் போட்டியாளரே கிடையாது“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here