நாளை நல்லூர் திருவிழா ஆரம்பம்; கட்டுப்பாடுகளும், புதிய நடைமுறைகளும்: முழு விபரம்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (25) ஆரம்பிக்கவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மத தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நல்லூர் ஆலயத்திலும் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.

பொலிசார், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர், யாழ் மாநகரசபை ஆகிய தரப்பினர் ஆலய வளாகத்தில் சுகாதார நடைமுறைகளை உறுதிசெய்வதில் ஈடுபடுவார்கள். அதேவேளை, ஆலயத்திற்குள் தொண்டர்கள் 3 அடி சமூக இடைவெளி பேணுவதை உறுதிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். அந்த பணியில் ஈடுபடும் தொண்டர்களிற்கு சிவப்பு சால்வை, சிவப்பு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு வருபவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் தேசிய அடையாள அட்டையும், வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தல் சான்றிதழும் கொண்டு வர வேண்டும்.

அனைத்து நுழைவாயில்களிலும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்பவர்கள் தமது முகத்தையும், அடையாள அட்டையையும் கமராவின் முன்பாக தெளிவாக காண்பித்து விட்டே ஆலயத்திற்குள் நுழையலாம்.

ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியான போதும், ஆலயத்திற்கு வருபவர்கள் அனைவரும் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மக்கள் ஆலயத்திற்கு வருவதை இயன்றவரை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆலய கொடியேற்றம், பூசை வழிபாடுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

ஆலய வளாகத்தில் எந்த பொழுதுபோக்கு அம்சமும் இருக்காது. திருவிழாக்கால கடைகள் அனுமதிக்கப்படவில்லை. ஆலய வளாகத்தில் தற்போதுள்ள வர்த்தக நிலையங்களில், திருவிழாவை முன்னிட்டு மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

அங்கப்பிரதட்டை, காவடி, அன்னதானம், மண்டபப்படி, தண்ணீர்ப்பந்தல் எதுவும் இம்முறை இருக்காது.

காலையில் உள்வீதியிலும், மாலையில் வெளிவீதியிலும் சுவாமி வலம் வரும். சுவாமி தூக்க தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர்ந்தவர்கள் தூக்க முடியாது. சுவாமி வலம் வரும்போது ஆலயத்திற்குள் மக்கள் சமூக இடைவெளி பேணுவதை தொண்டர்கள் உறுதிசெய்வார்கள்.

ஆலயத்திற்குள் வழிபடும் மக்கள் சமூக இடைவெளி பேண வேண்டும். அது ஒழங்குபடுத்தப்படும். வழிபாடு முடிந்ததும், உடனடியாக ஆலயத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். வழிபாட்டின் பின்னர் ஆலயத்தில் உட்கார்ந்திருந்து பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இன்று முன்னிரவிலேயே பலர் ஆலயத்திற்கு  வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு ஆலய நிர்வாகம் ஒலிபெருக்கி வழியாக சுகாதார நடைமுறைகளை அறிவுறுத்தியபடியுள்ளது. கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில கைகழுவி, முகக்கவசங்கள் அணிந்து உள்ளே வருமாறும், ஆலயத்திற்குள் வழிபாடுகளை முடித்தவர்கள் வெளியேறி ஏனையவர்களிற்கு சந்தர்ப்பமளியுங்கள் என்றும் அறிவித்தல் விடுத்த வண்ணமுள்ளனர். இதே நடைமுறை திருவிழா முடிவடையும் வரை தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here