இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்களா?: விக்னேஸ்வரனிடம் சிஐடி துருவித்துருவி விசாரணை!

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிடட அறிக்கை தொடர்பாக இன்று சிஐடியினரால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது அலுவலகத்திற்கு வந்த சிஐடியினர் விக்னேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையொன்றில் இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் மக்களே என வரலாற்றாதாரங்களுடன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவே இன்று விசாரணை நடத்தப்பட்டது.

விக்னேஸ்வரனின் அறிக்கை இனங்களிற்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு, அவர் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டாரா என்பதை உறுதிசெய்யுமாறு கொழும்பிலிருந்து தமக்கு உத்தரவு வந்ததாக, விசாரணைக்கு வந்த சிஐடி அதிகாரி தெரிவித்தார்.

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே என்பதை சிஐடி அதிகாரிக்கும் தெரிவித்த விக்னேஸ்வரன், தான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டது உண்மையென குறிப்பிட்டு, அறிக்கையின் பிரதியொன்றையும் வழங்கி வைத்துள்ளார்.

அறிக்கையை கொழும்பிற்கு அனுப்பி, தேவைப்பட்டால் தேர்தலின் பின்னர் விசாரணைக்கு வருவதாக சிஐடி குழுவினர் தெரிவித்து சென்றனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விவகாரம் தொடர்பில் விக்னேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார். அது தமிழ்பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here